காதலனுடன் சென்ற மகளை எண்ணித் தாய் கலங்குகிறாள்.
1
“இவள் கூந்தல் சுருண்டு படிந்துள்ளது. முலை சக்கரம் போலவும், செம்பு போலவும் எதிர்த்து நிற்கின்றன. இவை இவள் பெண் ஆகியதற்கான சான்றுகள்.” இவ்வாறு எண்ணிக்கொண்டு கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். நேற்றுக்கூட அவள் அழகைக் கண்ணால் உண்டு மகிழ்ந்தேன். என் நெஞ்சம் என்னிடம் இல்லை. அறியாமையில் மூழ்கிக் கிடந்தமையால் அவளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தவறிவிட்டேன்.
2
பெரும்பெயர் பெற்ற வழுதி அரசன் கூடல் நகரம் போல என் இல்லம் கட்டுக்காவல் மிக்கது. இந்த இல்லத்திலிருந்து அவள் சென்றுவிட்டாள். நடக்கும்போது ஒலிக்கும் தன் காலிலுள்ள சிலம்பைக் கூடக் கழற்றி வைக்காமல் சென்றுவிட்டாள். நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்.சுனையில் நீர் இல்லாததால் புறா உண்ணும் நெல்லிக்காய் நூல் அறுந்த பளிங்கு-மாலை போல வறண்ட நிலத்தில் உதிரும் காட்டு வழியில் சென்றுகொண்டிருப்பாளோ?கையில் கூர்மையான வேல் வைத்திக்கும் காளை போன்றவனுடன் சென்றுகொண்டிருப்பாளோ?காளையின் பொய்யுரையை நம்பிச் சென்றுகொண்டிருப்பாளோ?தேக்கின் அகன்ற இலைப்புதர் போல் தோன்றும் குடிசையில் வாழும் கானவர் சிறுகுடி முற்றத்தில் வேகவைத்த புலால் உணவை உண்டுகொண்டிருப்பாளோ?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''கூழையும் குறு நெறிக் கொண்டன;
முலையும்
சூழி மென் முகம்
செப்புடன் எதிரின;
பெண் துணை சான்றனள்,
இவள்'' எனப் பல் மாண்
கண் துணை ஆக
நோக்கி, நெருநையும்,
அயிர்த்தன்று மன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், 5
அறியாமையின் செறியேன், யானே;
2
பெரும் பெயர் வழுதி
கூடல் அன்ன தன்
அருங் கடி வியல்
நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ்
சுனைக்கு ஒல்கி,
புறவுக் குயின்று உண்ட
புன் காய் நெல்லிக் 10
கோடை உதிர்த்த குவி
கண் பசுங் காய்,
அறு நூல் பளிங்கின்
துளைக் காசு கடுப்ப,
வறு நிலத்து உதிரும்
அத்தம், கதுமென,
கூர் வேல் விடலை
பொய்ப்பப் போகி,
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் 15
அகல் இலை கவித்த
புதல் போல் குரம்பை,
ஊன் புழுக்கு அயரும்
முன்றில்,
கான் கெழு வாழ்நர்
சிறுகுடியானே.
மகட் போக்கிய தாய்
சொல்லியது.
குடவாயில் கீரத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment