தோழி தலைவனை வாழ்த்துகிறாள். எதற்காக?
1
இது கார்காலம். கார்மேகங்கள் நீர்க் கருவைச் சுமந்துகொண்டு நீல வானத்தில் அலைகின்றன. வானமே அதிரும்படி இடித்து முழங்குகின்றன. பனிக்கட்டியுடன் ‘தண்’ என்று மழையைப் பொழிகின்றன. காடே தழைக்கிறது. உழும் உழவர்கள் உரையாடும் ஒலி கேட்கிறது. முறுக்கிய கொம்பு கொண்ட ஆண் இரலைமான் தன் பெண்மானைத் தழுவிக்கொண்டு வயலில் உள்ள பயிர்களில் துள்ளி விளையாடுகிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மழை பொழிகிறது.
2
குதிரை ஓட்டும் நூலில் தேர்ச்சி பெற்ற தேரோட்டி சலங்கை-மணி கட்டிய குதிரையைத் தாவிச் செல்லும்படி ஓட்டுகிறான். அது கால் தப்படி தவறாமல் தாவி ஓடுகிறது. அது இழுத்துச் செல்லும் தேர் முல்லை நிலத்து ஈர மண்ணை அறுத்துக்கொண்டு செல்கிறது. மாலை வேளையில் மகிழ்ந்து யாழில் பாடும் செவ்வழிப் பண்ணின் இசை கேட்கிறது.
3
“இந்த நிலையிலும் அவர் வரவில்லை. அவர் நிலைமை என்ன? பாண! சற்றே எனக்குச் சொல்” என்று அவள் பாணனை வினவிக்கொண்டிருந்தாள். அவள் எல்லை கடந்த (கடவுள்) கற்பொழுக்கம் பூண்டவள். அறிவு மடம் பட்டவள். செய்வது அறியாமல் மயக்கம் கொண்ட நெஞ்சத்தோடு உன்னைக் கடிந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளது மனவருத்தம் நீங்க நீ நேரில் வந்துள்ளாய். இவளுக்கு இனிது செய்திருக்கிறாய். நீ தலையில் சூடியுள்ள உன் குடிமலர் வாழ்வதாகுக. வேலியைச் சுற்றிக்கொண்டு மலர்ந்திருக்கும் வெண்ணிற முல்லைப் பூ மாலை இவன் மார்பில் ஏறட்டும். இவள் கூந்தல் புதுமை பெறட்டும். இனிய புன்சிரிப்புடன் இந்த இளையவள் உன் மலர்ந்த மார்பைத் தழுவிக்கொண்டே இருக்கட்டும். – இவ்வாறு தோழி தலைவனை வாழ்த்துகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை
1
''நீலத்து அன்ன நீர்
பொதி கருவின்,
மா விசும்பு அதிர
முழங்கி, ஆலியின்
நிலம் தண்ணென்று கானம்
குழைப்ப,
இனம் தேர் உழவர்
இன் குரல் இயம்ப,
மறியுடை மடப் பிணை
தழீஇ, புறவின் 5
திரிமருப்பு இரலை பைம் பயிர்
உகள,
ஆர் பெயல் உதவிய
கார் செய் காலை,
2
நூல் நெறி நுணங்கிய
கால் நவில் புரவி
கல்லெனக் கறங்கு மணி இயம்ப,
வல்லோன்
வாச் செல வணக்கிய
தாப் பரி நெடுந் தேர் 10
ஈர்ம் புறவு இயங்கு
வழி அறுப்ப, தீம் தொடைப்
பையுள் நல் யாழ்
செவ்வழி பிறப்ப,
3
இந் நிலை வாரார்ஆயின்,
தம் நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது''
என,
கடவுட் கற்பின் மடவோள்
கூற, 15
செய் வினை அழிந்த
மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல்
தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க,
நின் கண்ணி!
வேலி சுற்றிய வால்
வீ முல்லைப்
பெருந் தார் கமழும்,
விருந்து ஒலி, கதுப்பின் 20
இன் நகை இளையோள்
கவவ,
மன்னுக, பெரும! நின்
மலர்ந்த மார்பே!
வினை முற்றிப் புகுந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது.
மதுரை அளக்கர் ஞாழார்
மகனார் அம்மள்ளனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment