வேறு வழி இல்லை.
அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருப்பதுதான் நம் வேலை
என்கிறாள் தோழி.
1
“இனி நாம் செய்யவேண்டிது வேறு என்ன இருக்கிறது?அஞ்சாமல் இரு” என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.உன் உடல் அழகு பொலிவு பெறும்படி ஆரத் தழுவி உன் நெஞ்சத்தைத் தன் நெஞ்சத்தோடு கட்டிப்போட்டுக்கொண்டவர் சென்றுவிட்டார்.அவர் சென்ற வழியை நினைத்து ஒவ்வொரு நாளும் கண்ணீரில் குளித்துக்கொண்டிருக்கிறாய்.சூடேறிய பெருமூச்சு விடுகிறாய்.துன்பம் இரவும் பகலும் உன்னை வருத்துகிறது.பாம்பு விழுங்கிய நிலாப் போல (சந்திர கிரகணம்) உன் முகத்தின் (நுதல் – ஆகுபெயர்) ஒளி மங்குகிறது.அவரைத் தவிர உனக்கு யார் இருக்கிறார் என்பது அறிந்தும் உன்னை இங்கே விட்டுவிட்டுப் பொருள் ஈட்டிவரச் சென்றுவிட்டார்.என்றாலும் அருள் எண்ணம் மேலிட விரைவில் வந்துவிடுவார்.தோழி அஞ்சாமல் இரு.
2
பெருமளவு செல்வத்தைக் கொட்டிக் கொடுத்த பின் சுருங்கிக் கிடக்கும் பை போல, பாம்பின் உடல் வற்றிக் கிடக்கும் பாலைநிலக் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார்.அந்த வழியில் வரும் புதியவர்களை அங்குள்ள வேட்டுவர் அம்பு பாய்ச்சுவர்.புண் பட்டவர் புண்ணில் ஊசியால் குத்தித் தையல் போட்டுக்கொள்வர்.தையல் போட்ட இடத்தில், தரையில் ஒழுகிக் கிடக்கும் குருதியைக் குடிப்பதற்காக, ஒற்றுப் பார்க்கச் செல்பவர் போலக் குரலை ஒடுக்கிக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் காக்கை அலையும்.அப்படிப்பட்ட மலைவழியில் அவர் சென்றுள்ளார்.அவர் நிலைமையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''இனிப் பிறிது உண்டோ?
அஞ்சல் ஓம்பு!'' என
அணிக் கவின் வளர
முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து,
அல்கலும்,
குளித்துப் பொரு கயலின் கண்
பனி மல்க,
ஐய ஆக வெய்ய
உயிரா, 5
இரவும் எல்லையும் படர்
அட வருந்தி,
அரவு நுங்கு மதியின்
நுதல் ஒளி கரப்ப,
தம் அலது இல்லா
நம் இவண் ஒழிய,
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும்,
அருள் புரிந்து,
வருவர் வாழி, தோழி!
பெரிய 10
2
நிதியம் சொரிந்த நீவி
போலப்
பாம்பு ஊன் தேம்பும்
வறம் கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணை
இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின்
குருதி மாந்தி,
ஒற்றுச் செல் மாக்களின்
ஒடுங்கிய குரல, 15
இல் வழிப் படூஉம்
காக்கைக்
கல் உயர் பிறங்கல்
மலை இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment