“அவர் செல்லும் வழியில் நாமும் சென்றால்
என்ன”,
தலைவி தோழியை வினவுகிறாள்.
1
மழவர் ஆனிரை (பசு-மந்தை) கவர்ந்து வருவர். வாள், வில் கொண்டு போரிட்டு எதிர்ப்போரை வென்று கவர்ந்துகொண்டு வருவர். பசுக்களை வேப்ப மரத்தடிக் கடவுள் முன் நிறுத்தி வழிபடுவர். வெற்றியைப் பாறைமீது அமர்ந்து விருந்துண்டு கொண்டாடுவர். விருந்தில் தெய்வத்துக்கு இரத்தக் காவுக் கொடுக்கப்பட்ட காளை மாட்டின் இறைச்சி இருக்கும்.அங்கே, வலிமையான அடிமரம் கொண்ட இலவ-மரத்தில் யானை தன் உடம்பை உரசிக்கொள்ளும். அப்போது உடைந்திருக்கும் இலவம்பூ நெற்றுகள் மழையோடு விழும் பனிக்கட்டி போல் விழும்.இப்படிப்பட்ட நீண்ட காடாயிற்றே என்று எண்ணாமல் அந்த வழியில் அவர் செல்கிறார்.
2
அரசன் வானவன் பெருங் குதிரைப்படையை நடத்தி நன்கு போரிட்டு வெற்றி கண்டவன். அவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். யாழிசையில் வல்ல கோடியர் அவனை நாடிச் செல்வது போல, நாமும் அவர் செல்லும் வழியில் உடன் சென்றால் என்ன? தோழி! எண்ணிப் பார்த்துச் சொல்.
3
கவண் எறிந்த கல் பட்டுக் காட்டு மூங்கில் உடைந்து தீ பற்றி வெடிக்கும். இரவில் தினைப் புனத்தில் மேயும் யானை அந்த வெடிப்பு ஒலியைக் கேட்டு அஞ்சி விலகும். இப்படிப்பட்ட வழியில் அவர் செல்கிறார்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து
வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை
வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி
தூஉய், 5
புலவுப் புழுக்கு உண்ட
வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய
கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ்
ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய
என்னார், கோடியர்
2
பெரும் படைக் குதிரை,
நல் போர், வானவன் 10
திருந்து கழற் சேவடி நசைஇப்
படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ
தோழி! காம்பின்
3
வனை கழை உடைந்த
கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து
வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த
உரவுச் சின வேழம் 15
தண் பெரு படாஅர்
வெரூஉம்
குன்று விலங்கு இயவின்,
அவர் சென்ற, நாட்டே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.
கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment