Pages

Saturday, 1 October 2016

அகநானூறு Agananuru 303

நீர் வற்றிய குளத்தில் இருக்கும் மீனை நீர் உள்ள குளத்திக்குக் கொண்டுசெல்வர். 
அது போல என்னை என் காதலர் உள்ள இடத்துக்கு யாராவது கொண்டுசெல்ல வேண்டும் என ஏங்குகிறேன், என்கிறாள் தலைவி.

1
அவர் பிரிந்திருக்கும் இடைக்காலத்தில் பிறருக்குத் தெரியக்கூடாதே என்று எண்ணி, கனவில் பேயைக் கண்டது போல, நுட்பமாக என்னை வாட்டிக்கொண்டிருக்கும் காம உணர்வுகளை மறைத்து வைத்திருக்கிறேன்.
2
வெற்றி வேலும், வீரமும் கொண்ட படையை உடையவன் பசும்பூண்-பொறையன். அவனது கொல்லிமலையின் உச்சியிலிருந்து தாவி, பெருக்கெடுத்து ஓடுவதும், கார்த்திகை என்னும் காந்தள் பூக்கள் பூத்துக் கிடப்பதும், அச்சம் தரும் சூர்-மகள் வாழ்வதுமான அருவி போன்று என்னைப் பற்றிப் பிறர் அலர் தூற்றுகின்றனர். இப்படித் தூற்றும்படி விட்டுவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார்.
3
அறிவைத் துணையாகக் கொண்ட இரவலர் சென்றால், மலை போன்ற யானைகளையும், அவற்றில் ஏற்றிய அணிகலன்களையும் வழங்கிப் புகழ் பெற்றவன் பறம்புமலை அரசன் பாரி. மூவேந்தர் முற்றுகை இட்டிருந்த காலத்தில் அவன் வளர்த்த குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று மாலையில் நெல்லங்கதிர்களோடு திரும்பும். அதனை உண்டு அரசுச்சுற்றம் வாழும்.
4
அந்தப் பறவைகள் திரும்புவது போல, பொருளீட்டச் சென்றவர் திரும்பிவிடுவார் என்று, என் நெஞ்சே! காத்திருக்கிறாய். வருவாரோ என்னும் உன் ஐயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்.  
5
உமணர் உப்பு-வண்டியில் பூட்டிய எருதுகளின் மணி ஒலிப்பது போல், வறண்ட மரங்களில் இருந்துகொண்டு சில்வீடு என்னும் வண்டுகள் ஒலி எழுப்பும் அவர் சென்றிருக்கும் காட்டுக்கு, நீர் வற்றும் குளத்தில் இருக்கும் மீனை நீர்-உள்ள குளத்துக்குக் கொண்டுசெல்வது போன்று, என்னை யாராவது கொண்டுசெல்ல-மாட்டார்களா, என ஏங்குகிறேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
2
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை   5
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
3
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்     10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
4
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!       15
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
5
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.       20

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
ஒளவையார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

சில்வீடு | சில்லுவண்டு

சில்வீடு ஒலி

No comments:

Post a Comment