Pages

Friday 30 September 2016

அகநானூறு Agananuru 300

விழுந்தினன் போல ஊருக்கு வந்து உன் காதலியின் தந்தையின் விருந்தாளியாக இல்லத்தில் தங்குக – என்று தோழி தலைவனை வேண்டுகிறாள்.

1
வலையால் மீன்களை முகந்துகொண்டு காலையில் வந்த பரதவர் நுண்மணலில் காயவைப்பர். மீன் உண்ணும் குருகுக் கொள்ளையர் அதனைப் பறித்துச் செல்லும். இப்படிப்பட்ட கானல் பெருந்துறையில் பகல் காலத்தைப் போக்கினோம். இனி நீ உன் இல்லத்துக்குச் செல், - என்கிறான் தலைவன்.
2
தன் தேரைப் பூட்டுமாறு வலவனை ஏவுகிறான். தலைவியில் கை-வளையல்களைத் திருத்தி விடுகிறான். தலைமுடியை நீவி விடுகிறான். “மடந்தையே, நீ உன் தோழியாடு உன் மனைக்குச் செல்” என்கிறான். சொன்னதும் தலைவி கண்ணீர் விட்டுக் கலங்குகிறாள். அதனைப் பார்த்த தோழி தலைவனிடம் சொல்கிறாள். இவள் தீங்குற்றாள். இந்தத் தீங்கைப் போக்காமல் ஒன்றுமறியாத நொதுமலர் போல நீ பிரிந்து சென்றால், இவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன்.
3
அதனால், ஏதோ மிகத் தொலைவிலிருந்து களைப்புடன் வருபவர் போல எம் சிற்றூருக்கு வாருங்கள். பெருவளம் மிக்க அந்த ஊருக்கு வந்தால், இவளது பெற்றோர் எதிர்கொண்டு மென்மையாக நலம் வினவி, விருந்தினராக வரவேற்பர். துறையிலும் இருள் சூழ்ந்துவிட்டது. சுறா மீன்களும் கடலலையில் வந்து மேய்கின்றன. இவை நீ திரும்புவதற்கு மாறாக நிற்கின்றன.
4
பொழுதும் போய்விட்டது. மேம்பட்டுத் தோன்றுபவனே! செல்லவேண்டாம். எங்களின் குறைகளை (முறையீடு) ஏற்று எம் ஊரில் தங்குங்கள். உன்னுடன் வந்த தோழரும், இன்புறலாம். விருந்தும் பெறலாம். பெருமானே! இவளுக்கு நீ அளி செய்வாயாக. – தோழி இவ்வாறு தலைவனை வேண்டுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  நெய்தல்

1
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,           5
2
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச்
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
தீங்கு ஆயினள் இவள் ஆயின், தாங்காது,    10
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
3
சேணின் வருநர் போலப் பேணா,
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,                 15
''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
4
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என,
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும் 20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
உலோச்சனார்  பாடல்
மணி மிடை பவளம் முற்றும்
நித்திலக் கோவை தொடரும்

கி.மு. காலத்துப் பாடல்

மணலில் காயும் மீன் 

No comments:

Post a Comment