Pages

Friday, 30 September 2016

அகநானூறு Agananuru 299

பொறுளீட்டச் செல்லும் வழியில், தலைவன் நினைவு தள்ளாடுகிறது.

1
எண்ணம் முந்திக்கொண்டு செயல்பட, இரவும் பகலும் ஊரை மறந்து செயலில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், அன்று நிகழ்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை.
2
கடுங்காற்றில் கிழிந்த தேக்கிலைகள், கத்திக்கொண்டு வெறியுடன் பறக்கும் பருந்து போலப் பறந்து  கண்களை மூடும். மேலும் அந்த அகலிட வெளியில் செல்பவர்களுக்கு வழி தெரியாமல் அவை மூடிக் கிடக்கும். பொருளீட்டி வர அந்த வழியாகச் செல்லவிருக்கிறேன், என்று அவளிடம் அன்று சொன்னேன்.
3
குறையப் போகும் முழு-நிலா மலையில் மறைவது போன்ற முகத்துடன் துன்புற்றாள். 

புத்தழகு திகழும் அந்த முகத்தைக் கவிழ்த்துக் காட்டி என்னை வணங்கினாள். 

கால் விரலால் நிலத்தில் கோடு போட்டுக்கொண்டிருந்தாள். 

கண்ணீர் ததும்பும் அவளது மழைக்கண்களிலிருந்து விழுந்த பனித்துளி அவளது மார்பகத்தை நனைத்தது. 

கால்கள் நிலைகொள்ளாமல், கலங்கும் நினைவலையில் நடுங்கின. 

ஆற்று-அறல் போன்ற கூந்தலில் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள். 

“திறமை மாட்சிமை பொருந்தியதாக மாறி, செல்லவேண்டும் என்ற என்ற முடிவு திருந்துவதாகுக” என்று வாயால் சொல்வது போலப் பெருமூச்சு விட்டாள். 

என்னை அணைக்கத் துடித்தவளாய்ப் பித்துப் பிடித்தவள் போல நின்றாள்.

இந்த நிலையை என்னால் மறக்க முடியவில்லை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
2
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை     5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,     10
3
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,               15
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள்,'' திறல் மாண்டு
திருந்துக மாதோ, நும் செலவு'' என வெய்து உயிரா,
பருவரல் எவ்வமொடு அழிந்த 20
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.

இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இவளைப் போல, ஆனால் கூந்தலால் முகத்தை மறைத்துக்கொண்டு பாடல் தலைவி நின்றிருப்பாளோ? ஒரு கற்பனை 

No comments:

Post a Comment