Pages

Thursday, 29 September 2016

அகநானூறு Agananuru 298

நீ வந்த இனிமையை விட இவள் உனக்காகக் காத்திருந்த இனிமை மேலானது, தோழி சொல்கிறாள்.  
1
காலையில் கடலில் தோன்றும் கதிரவன் போல, மாலையில் வேங்கைப் பூ மலர, மழைத்துளிகள் தடவிக்கொடுக்கும் நாட்டை உடையவனே!
  • ஞாயிறு – கதிரவன். பயன் தரும் செல்வத்தை வழங்கும் பல்வண்ணக் கதிர்களை விரித்துத் தொழிலாற்றிக்கொண்டு மேலேறுவதற்காகக் கடலில் தோன்றுகிறது.
  • வேங்கை – மணி நிறத்தில் இருளும் மாலை வேலையில் மலரும். தழைத்திருக்கும் தளிர்களிடையே மலரும்.
2
யானை நடமாட்டும் காட்டு-வழியில் இருளைக் கிழித்து மின்னும் வேலைக் கையில் வைத்துக்கொண்டு, மாலை அணிந்துகொண்டு, நள்ளிரவில் நீ வந்தது இனியதுதான். அதைக்காட்டிலும் இனியது ஒன்று உண்டு.
  • இருங்களிறு – பெரிய ஆண்யானை. புலியைக் கொன்ற பின்னும் சினம் தணியாத யானை. பகை கண்டு சோராத யானை. பெண்யானைக் கூட்டத்துடன் சேராதிருக்கும் யானை. மதம் மழையாகப் பொழியும் யானை. வளம் மிக்க மலையெங்கும் அலையும் யானை.
  • பூங்கோதை – தேன் உண்ணும் வண்டுகள் மொய்ப்பதால் மலரும் பூக்களால் ஆன மாலை.
3
தந்தை, தாய் ஆகியோர் கட்டுக் காவலில் இவள் தன் காம உணர்வை அடக்கிக்கொண்டு தூங்காமல் நள்ளிரவில் உன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும்போது வருந்தாதே என்றேன். – தோழி கூறிகிறாள்.
  • தந்தை - தூய கள்ளின் சுறுசுறுப்பு ஏறுவது போல விரைந்து செல்லும் தேரினை உடையவன்.
  • யாய் – தாய். கட்டுக்காவல் மிக்க மனையில் தலைவியாகிய மகளைப் பாதுகாத்துக்கொண்டு இருப்பவள். 
  • தலைவி – கட்டுக் காவலில் தன் காமத்தைப் பற்றித் தாய்க்கோ, தோழிக்கோ சொல்லாமல் தலைவன் நினைவில் தாங்கிக்கொண்டடிருந்தாள்.  
தோழி – வருந்தாதே, வாழி, தோழி என்று தலைவியைத் தேற்றுகிறாள்.
4
உன்னைத் துறந்தவர் காலம் தாழ்த்தமாட்டார், வந்துவிடுவார் என்று நான் கூறியதைக் கேட்டுக்கொண்டு தூங்காமல் இரவைத் துணையாக்கிக்கொண்டு காத்திருக்க விரும்பினாளே, அது உன் வருகையைக் காட்டிலும் இனியது. – தோழி இவ்வாறு கூறுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி,
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத்         5
தண் துளி அசைவளி தைவரும் நாட!
2
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது,
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,                             10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
நீ வந்தது அதனினும், இனிது ஆகின்றே
3
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை 15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்    20
4
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!

இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வேங்கை மலர்

No comments:

Post a Comment