“உன்னோடு நானும் வருகிறேன்” என்றாளே, எப்படி இருக்கிறாளோ?, தலைவன் தான் செல்லும் வழியில் இப்படி நினைக்கிறான்.
1
நள்ளிரவிலும், மாலையிலும் தாங்கமுடியாத காம நோயோடு கலக்கத்துடன் என்னை நினைத்து எல்லை கடந்த துன்பத்துடன் என்ன நிலைமையில் இருக்கிறாளோ?நெஞ்சே! நினைத்துப் பார்.
2
வழியில் செல்லும் புதியவர்கள், ஆனிரை கவரும் மறவரோடு போரிட்டு மாய்ந்த வீரனின் நடுகல்லில் இருக்கும் அவனைப் பற்றிய எழுத்தைப் படிக்காமல் செல்லும் வழியில் நான் செல்கிறேன்.
- மறவர் – இருண்டு, அழகில்லாமல், பெரிதாக, அங்குமிங்கும் முளைத்திருக்கும் புல் போன்று முளைத்திருக்கும் தாடியைக் கொண்டவர்கள். கடுமையான கண்-பார்வை கொண்டவர்கள்.
- நடுகல் – வீரன் உருவம் குறுகிய இடையுடன் காணப்படும். அச்சம் தரும். வீரனின் பெயரும், அவனால் விளைந்த பயனும் குழிந்த எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.
3
நிலாவைச் சுற்றி விண்மீன்கள் இருப்பது போல் தாயைச் சுற்றிக்கொண்டு பூனைக்குட்டிகள் தாயைப் பின்தொடர்ந்து செல்லும் முற்றம் கொண்ட ஊர் சிறுகுடி.
- முன்றில் – சூர-முள், ஓமை-மரம், நீர்ப்பூலா-முள் ஆகியவற்றை வேலியாகக் கொண்டது. புறவு என்னும் முல்லை-நிலத்தில் இருப்பது.
- வெருகுப்பூனைக் குட்டிகள் – காட்டுப்பூனைக் குட்டிகள். எழுதிய ஓவியம் போல உடலில் கோடுகள் இருக்கும் குட்டிகள். பூளாப்பூ போன்ற மயிர் கொண்ட குட்டிகள்.
4
சிறுகுடியில் வாழும் மறவர்கள் காளையோடு போரிடும்போது முழங்கும் தண்ணுமை ஒலியைக் கேட்டு, கழுகுகள் சிறகை விரித்துக்கொண்டு பறக்கும் காட்டுக்கு “உன்னோடு வருகிறேன்” என்று சொன்னாளே! அறியாப் பார்வையைக் காட்டிக்கொண்டு சொன்னாளே!
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
2
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் 10
3
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் 15
4
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
''வருவல்'' என்றோள் மகிழ் மட நோக்கே?
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
![]() |
| குட்டிகளுடன் வெருகு | காட்டுப்பூனை |
![]() |
| பூளை | பூளாப்பூ | பூளாப்பூ போன்று மயிர் கொண்டது வெருகுப் பூனை |
![]() |
| சேக்கோள் |



No comments:
Post a Comment