அவளோடு நேற்றும் இன்றும். அப்பப்ப!
1
காஞ்சி மலர் சூடிய கூந்தலும்,மை தீட்டி மதமதக்கும் கண்ணும் கொண்டமாயக்காரியோடு நேற்று, பகலெல்லாம் தூங்கினாய்.இன்றும் வையைப் புனலில் அவளோடு நீராடினாய்.அவளைத் தழுவிய ஈரம் காயாத மார்போடு இங்கு என்னிடம் வந்திருக்கிறாய்.இதனை உன்னால் மறைக்க முடியுமா?காஞ்சி – கொத்தாகப் பூக்கும். காம்பு சிறியதாக இருக்கும்.
2
மீன் பிடிக்கும் வலையில் முத்துச் சிப்பிகளும் வரும்.
இந்த முத்துக்களை நறவுக் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் கொற்கை மக்களின் அரசன் செழியன். அவன் கூடல் நகரில் நீண்ட காலம் தங்கி நாடாள்வது ஊருக்கெல்லாம் தெரியும்.அதுபோல மற்றொருத்தியோடு நீ கொண்ட உறவு ஊருக்கெல்லாம் தெரியும்.பலரும் பேசிக்கொள்கின்றனர்.நெருங்காதே.இப்படிச் சொல்லித் தலைவி ஊடுகிறாள்.செழியன் – யானைமீதும், தேர்மீதும் செல்வான்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
கோதை இணர, குறுங்
கால், காஞ்சிப்
போது அவிழ் நறுந்
தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக்
கண், மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி,
இன்றும்
பெரு நீர் வையை
அவளொடு ஆடி, 5
புலரா மார்பினை வந்து
நின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே?
பரப்பில்
2
பல் மீன் கொள்பவர்
முகந்த இப்பி
நார் அரி நறவின்
மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசைக் கொற்கைப்
பொருநன், வென் வேல் 10
கடும் பகட்டு யானை
நெடுந் தேர் செழியன்,
மலை புரை நெடு
நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது
பலர் வாய்ப் பட்டே.
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி
சொல்லியது.
மதுரைப் பேராலவாயார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment