Pages

Wednesday, 28 September 2016

அகநானூறு Agananuru 292

எரிமீன் வீழ்ச்சி போல் கவண் கல் வீச்சு விசை


1
தோழி! நான் என்ன செய்யவேண்டும் என்று நீ சொல், என்று தலைவி தோழியை வேண்டுகிறாள்.

மலைநாடன் தழுவாததால் என் மேனி வாடியிருக்கிறது. 

அன்னை வேறு வகையில் உணர்ந்துகொண்டிருக்கிறாள். 

வேலனுக்குப் பொருளைக் கொட்டித் தந்து தடுமாறுகிறாள். 

தாயிடம் பால் குடிக்க முடியாமல் இளந்தளிர்களை உண்ணும் ஆட்டுக்குட்டியைப் பலியிட விரும்பி, தொடர்பே இல்லாத வேலன் வெறியாட்டத்தில், கழுத்தில் மாலை அணிந்துகொண்டு உடுக்கடித்துப் பாடுகிறான். 

அது என்னை நாண வைக்கிறது.
2
எனக்கோ வளையல் கழலும் துன்பம்.

காட்டில் மேயவேண்டிய யானை அதனை விட்டுவிட்டு இரவில் வயலில் மேய வருகிறது. அது காலடி வைத்து நடந்து வரும் ஓசையைக் கேட்ட கானவன் நள்ளிரலில் மலை நடுவில் கட்டி வைத்திருக்கும் பந்தலாகிய கழுதின் மேல் ஏறி இருந்துகொண்டு, தன் வலிமை மிக்க கையால் கவணில் கல் வைத்து எறிகிறான். 

அந்தக் கல் வானத்தில் எரிமீன் விழுவது போல மிக்க விசையுடன் செல்கிறது. 

அந்த விசையில் வேங்கைப் பூக்கள் சிதறுகின்றன. 
அடுத்திருந்த தேன் கூடு சிதறுகிறது. 
அதனை அடுத்திருந்த பலாப் பழத்துக்குள் நுழைந்து தங்கிக்கொள்கிறது.  

இப்படித் தங்கிக்கொள்ளும் மலைநாட்டுத் தலைவன் என் காதலன். 

அவன் என்னைத் தழுவாத காலத்தில் (மணவாக் காலே) இந்த வெறியாட்டு நிகழ்கிறது.

நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்       5
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
2
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்           10
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவாக் காலே!              15

வெறி அச்சுறீஇ, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கவணை


கவண்


கவண், கவணை

No comments:

Post a Comment