நெஞ்சே! காட்டில் இருந்துகொண்டு காதலியின் அழகை நினைக்கிறாயே!, தலைவன் தன் நெஞ்சைக் கேட்கிறான்.
1
பொழியும் வளத்தை வானம் மறைத்துக்கொண்டது. காட்டில் மரங்கள் இலை இல்லாமல் உலர்ந்து கிடக்கின்றன. ஆடுமாடுகள் பசியோடு துடிக்கின்றன. குளம் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. பெரிய மலைப்பகுதியில் புலியோடு போராடிய யானையின் கால்கள் ஒதுக்கிய பரல்-கற்கள் பகலில் மேயும் மின்மினி போல் எல்லா இடங்களிலும் இமைக்கின்றன. இப்படி நிறைவடைய முடியாத நீண்ட வழி இது.
2
கழுகுகள் தன் சிறகுகளை விரித்துத் தனக்கே நிழலை உண்டாக்கிக்கொள்கின்றன. விரிந்த பூக்களில் தேன் உண்ணும் பறவைகள் போல இசை எழுப்பிப் பாயும் அம்பினை உடையவர்கள் தலையில் உவலைப் பூ சூடிக்கொண்டு, ஆரவாரத்துடன் தாக்கி, வழியில் வருபவர்களின் விலையுயர்ந்த பொருள்களைப் பிடுங்கிக்கொள்கின்றனர். எனவே, வாணிகம் செய்யும் சாத்துக் கூட்டம் இவ் வழியில் வருவதே இல்லை. இந்த வழியில்,
3
சிறிய இலைகளை உடைய நெல்லிக் காய்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றை உண்ணுவதற்காக, கிளைத்த கொம்பினை உடைய ஆண்-மான் புள்ளிகளை உடைய தன் பெண்மானை அழைத்துக் கூவுகிறது. தன் கிளைத்த கொம்பே அதிரும்படிக் கூவுகிறது. வெயில் காய்ச்சும் இப்படிப்பட்ட பாலைநில வழியில் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.
4
இங்கே இருந்துகொண்டு, நெஞ்சே! நம் காதலியின் மென்மையான பருத்த தோளின் அழகினை நினைத்து ஏங்குகிறாய். பூவைப் போல் மணம் கமழும் அவள் கூந்தலை நினைத்து ஏங்குகிறாய். அழகுடன் திகழும் அவளது ஈரக் கண்களை நினைத்து ஏங்குகிறாய். நான் என்ன செய்வேன்?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
வானம் பெயல் வளம்
கரப்ப, கானம்
உலறி இலை இலவாக,
பல உடன்
ஏறுடை ஆயத்து இனம்
பசி தெறுப்ப,
கயன் அற வறந்த
கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த
மருங்கில், கொடு வரிப் 5
புலியொடு பொருது சினம் சிறந்து,
வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய
மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி
கடுப்ப, எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா
நீள் இடை
2
எருவை இருஞ் சிறை
இரீஇய, விரி இணர்த் 10
தாது உண் தும்பி
முரல் இசை கடுப்ப,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர்,
கவலை
ஆர்த்து, உடன் அரும் பொருள்
வவ்வலின், யாவதும்
சாத்து இடை வழங்காச்
சேண் சிமை அதர 15
3
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள்
காய்
உதிர்வன தாஅம் அத்தம்
தவிர்வு இன்று,
புள்ளி அம் பிணை
உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த
தலைய, தோல் பொதி,
மறு மருப்பு இளங்
கோடு அதிரக் கூஉம் 20
சுடர் தெற வருந்திய
அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
4
உள்ளினை வாழிய, நெஞ்சே!
போது எனப்
புலம் கமழ் நாற்றத்து
இரும் பல் கூந்தல்,
நல் எழில், மழைக்
கண், நம் காதலி
மெல் இறைப் பணைத்தோள்
விளங்கும் மாண் கவினே. 25
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லி யது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment