Pages

Tuesday, 27 September 2016

அகநானூறு Agananuru 290

கண்ணில் பூத்த காதல் நிறம்.

1
ஆண்-கொக்கு குஞ்சுகளுக்கு மீன் கொண்டுவர அதிகாலையில் சேற்று நீர் உப்பங்கழிக்குச் சென்றது. 

சீவாத தலையுடன் சிறுவர்கள் மீனுக்காக அந்த நீரில் நுண்ணிய கயிற்றாலான வலையை வீசினர். 

அந்த வலையில் ஆண்கொக்கு மாட்டிக்கொண்டது. 
அதனைப் பார்த்த பெண்-கொக்கு ஒய்-எனப் பறந்து சென்று பொழுது இறங்கும் மாலைக்காலம் வரையில் உணவு உண்ணாமல் பனைமரக் கூட்டிலிருக்கும் தன் இளங் குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு ஆண்கொக்கின் மீதுள்ள அன்பால் கத்திக்கொண்டே இருந்தது. 

இப்படிக் கத்திக்கொண்டிருக்கும் சேர்ப்பு (உப்பங்கழிச் சேர்) நிலத்தில் வாழும் பழங்குடிகளின் தலைவன் அவன்.
2
உப்பங்கழி ஓரத்தில் புன்னைப் பூக்கள் அழிந்து கிடக்கும் கானலுக்கு அவன் தனியே வந்தான். பிரிய முடியாத நெஞ்சோடு வந்தான். அவன் என்னைத் தழுவவும் இல்லை. அதற்கு முன் என் கண்ணுக்கு என்ன ஆயிற்று?
3
யானைப்படை கொண்டு வெற்றி கண்டவன் குட்டுவன் என்னும் சேர மன்னன். தொண்டி நகரம் அவனது கடல்-துறை. அந்தத் துறையில் சுரும்பு தேன் உண்ணும்படி நெய்தல் மலர்ந்திருக்கும். அந்த நெய்தல் மலரின் கருநிறத்தை உடையது என் கண். இந்தக் கண்ணுக்கு என்ன ஆயிற்று. அவனைப் பெறவில்லையே என்று பொன்னிறப் பசலை பூத்துக் கிடக்கிறதே!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

1
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,        5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
2
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்  10
மணவா முன்னும் எவனோ தோழி!
3
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,        15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது.
நக்கீரர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மரத்திலுள்ள கூட்டில் குஞ்சுகளுடன் கொக்கு
(பாடல் - பனைமரக் கூட்டில்) 

No comments:

Post a Comment