என் காதலி பல்லி படும் ஒலி கேட்டுப் பொருமிக்கொண்டிருப்பாளோ, தலைவன் நினைக்கிறான்.
1
வில்லிலிருந்து வந்து ஏறிப் பாய்வது கணை என்னும் அம்பு. வழிப்பறி எயினரின் அந்த அம்பு பட்டு புதிய வழிப்போக்கர்கள் வீழ்வர். அவர்களைப் பதுங்கி இருந்து வீழ்த்தும் இடம் பதுக்கை. அந்தக் கல்லடுக்குப் பதுக்கையில் ஏறிப் பின்னிக் கிடக்கும் அதிரல் (காட்டுமல்லிகை) கொடி பின்னிக்கொண்டு படர்ந்திருக்கும். அதன் பூக்களைப் பறித்து நடுகல் தெய்வத்துக்குப் பலியாகச் சாத்துவர். இப்படிச் சாத்தும் வழியில், கானல்-நீர் ஓடும் வழியில் பொருளீட்டும் வினையைத் தலைமேற் கொண்டு வந்திருக்கிறேன்.
2
அப்படி வருந்தும் என்னைச் சுற்றிக்கொண்டு அவள் உள்ளம் படர்ந்து வருந்திக்கொண்டிருக்கும். அவளை அணைத்துக்கொண்டிருந்த என் கை சற்றே விலகினும், தன் கையை உய்த்து அணைத்துக்கொள்ளும் மடத்தகைமை கொண்டவள் அவள்,
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள் 1187
3
நான் பிரிந்து வந்த ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோடு சுவரில் போட்டு, அதனை ஒவ்வொன்றாக நாள்தோறும் விரலால் ஒற்றி எண்ணிப் பார்க்கையில் கண்ணீர் முத்து அவள் முலையில் பட்டுத் தெறிக்கும்.
வாள்-அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாள்-ஒற்றித் தேய்ந்த விரல் – திருக்குறள் 1261
மென்மையான அன்னத்தின் தூவி திணிக்கப்பட்ட மெத்தை. அதன்மேல் அழுக்கு நீக்கப்பட்ட தூய்மையான விரிப்பு. அதன் மேல் அவள் படுத்திருப்பாள். பல்லி ஒலிக்கும். அந்த ஒலி கேட்கும்போதெல்லாம் “நல்லது கூறு” என்று வேண்டிக்கொண்டு மாலை வேளையில் பொருமிக்கொண்டிருப்பாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
சிலை ஏறட்ட கணை
வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த
ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல்
நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன்
ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த
நம்வயின், என்றும், 5
2
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி
வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத்
தகுவி
3
சேண் உறை புலம்பின்
நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி,
நினைந்து, கண் பனி, 10
நெகிழ் நூல் முத்தின்,
முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த
படை அமை சேக்கை
ஐ மென் தூவி
அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன்
அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, 15
''நல்ல கூறு'' என
நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
எயினந்தை மகன் இளங்கீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment