காதலனுடன் செல்லவிருக்கும் காதலியின் மகிழ்ச்சி.
1
“அவர் என்னை விட்டுவிட்டு பொருளீட்டச் செல்வார், சென்றுவிட்டுப் போகட்டும்” என்று எண்ணிக்கொண்டு துன்புற்று இருக்கும் வேளையில் உன் துன்பமெல்லாம் நீங்கும்படி அவர் கூறினார்.
2
கூர்மையான பற்களால் ஊன் தின்னும் பெண்-செந்நாயின் பசியைப் போக்க ஆண்-செந்நாய் காட்டில் திரியும் பெண்-மான் அலறும்படி ஓடும் அதன் ஆண்-மானின் தசையைப் பிடுங்கிக் கொண்டு சென்று, வெயிலின் கொடுமை தாங்கமாட்டாமல் இளைப்பு வாங்கும் வழியில்,வேங்கைப் புலியின் வரிக்கோட்டுத் தோல் போல், கல்லில் மோதிக் கிழிந்துபோன கருநிற-ஆடை உடுத்திக்கொண்டு, கிழிந்த குடையுடன் வரும் புதியவர்க்காக, வேட்டுவரும், இனத்தைப் பிரிந்துவந்த கழுகும் காதால் உற்றுக் கேட்டுக்கொண்டு காத்திருக்கும் வழியில்.
3
பருத்த தோளும், குவளை போன்ற கண்களும் கொண்ட இவளும் என்னோடு வரட்டும் என்று உன் காதலர் கூறினார்.தோழி! வருக நாம் பலமுறை கட்டித் தழுவிக்கொள்வோம்.தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''ஒழியச் சென்மார், செல்ப''
என்று, நாம்
அழி படர் உழக்கும்
அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண்
அகல, வை எயிற்று
2
ஊன் நசைப் பிணவின்
உறு பசி களைஇயர்,
காடு தேர் மடப்
பிணை அலற, கலையின் 5
ஓடு குறங்கு அறுத்த
செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும்
வெம்மைய, பயில் வரி
இரும் புலி வேங்கைக்
கருந் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த
பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர்
உயர் மரம் ஏறி, 10
ஏறு வேட்டு எழுந்த
இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும்
அத்தம், பணைத் தோள்
3
குவளை உண்கண் இவளும்
நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்;
வாராய் தோழி! முயங்குகம்,
பலவே. 15
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment