Pages

Thursday 22 September 2016

அகநானூறு Agananuru 280

பெண் வீட்டாருக்குப் பொருள்களைக் கொடுத்து ஆண் திருமணம் செய்கொள்ளும் காலம் அது.


இவளை அடைவது எப்படி? காதலன் கலக்கம்.
1
பொன்னால் செய்து வைத்தது போல் பூத்துக் கிடக்கும் செருந்திப் பூக்கள் பலவற்றை இவள் தலையில் அணிந்திருக்கிறாள். 

திண்ணிதாக இருக்கும் மணலில் நண்டை ஓடும்படிச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

வளையல் அணிந்த இந்தச் சிறுபெண்ணைப் பெறற்கரிய பொருள்களைக் கலம் கலமாக கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெறமுடியாது.
2
எனவே ஒன்று செய்யலாம். 

நான் வாழும் ஊரை விட்டுவிட்டு இவள் தந்தைக்கு அறம் செய்யலாம். 

இவள் தந்தை உப்பு உழவு செய்யும்போது உடனிருந்து உழைக்கலாம். 

கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடன் மீன் பிடிக்கச் செல்லலாம். 

அவனுடன் படுத்து உறங்கலாம், அவனைப் பணிந்து நடந்துகொள்ளலாம். அவன் கூடவே இருக்கலாம். 

அப்படி இருந்தால் அவன் இவளை எனக்குத் தரக்கூடும்.

அவன் கொடையாளி. கடலில் மூழ்கி எடுத்துத் தான் கொண்டுவந்த முத்துக்களை, தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பண்பு கொண்டவன். 

கானலம் பெருதுறையின் தலைவன். பரதவன். இவளுக்குத் தந்தை. இவன் எனக்கு இவளைத் தந்துவிடுவான்.

இப்படித் தலைவன் நினைக்கிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

1
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,     5
பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து,
2
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,   10
தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது;
அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம்,
அம்மூவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

செருந்தி
மகளிர் தலையில் அணியும் மலர்

No comments:

Post a Comment