Pages

Wednesday 21 September 2016

அகநானூறு Agananuru 278

அவருடன் நீராடலாம் 


கீழைக்கடல் நீரை மேகம் கொள்ளையடித்துக்கொண்டு செல்கிறது. 

முரசு முழக்கும் பெருமை கொண்ட வேந்தரின் தோல்படை அணிவகுப்பபைப் போலச் செல்கிறது. 
அவர்களின் வெற்றிக்கொடி பறப்பது போல மின்னுகிறது. அவர்களின் வெற்றி முரசம் போல முழங்குகிறது. 

இப்படி முழங்கிக்கொண்டு பெருமலையை அவை முற்றுகை இட்டால், அந்த வேந்தர்களின் வாள் போல் மின்னிக்கொண்டு அருவி இறங்கும். மூங்கில் மரங்களைத் தாக்கிக்கொண்டு அருவி இறங்கும்.

வளமை மிக்க குதிரையில் ஏறிக்கொண்டு, நாளைக்கு அவர் நம் ஊர்த் துறைக்கு வருவார். 

நாளை நண்பகலில் ஈரக் கண் சிவக்குபடி நீராடலாம். 
அவர் மீதுள்ள சினம் தணியும்படி நீராடலாம். 
மூழ்கி நீராடலாம் அல்லவா?

மணி நிறம் கொண்ட உன் மேனி நலம் தொலைய துன்பம் செய்தவர் அல்லவா அவர்.

அன்று அவருடன் நீராடியது போல நாளையும் நீராடலாம் அல்லவா?
தோழி தலைவியை வினவுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,    5
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண் பரி உந்தி,
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;       10
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம் கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?      15

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மார்பில் தோல் கவசம் அணிந்திருக்கிறான்
மார்புக்குக் கவசம் போல அரசனுக்குக் கவசமாகச் செல்லும் படை தோல்படை
தோல்படை போல மேகம் மலையைச் சூழ்ந்திருக்கிறது, என்கிறது பாடல்  

No comments:

Post a Comment