Pages

Wednesday, 21 September 2016

அகநானூறு Agananuru 277

சேவல் சண்டையிடுவது போல, 
அவர் என்னிடம் இல்லாதபோது, 
வேனில் காலம் என்னைத் தாக்குகிறதே!  

1
சூடு தணிந்த கதிரை வீசும் கதிரவன் முற்றிலுமாகச் சாய்ந்து பகல் காலம் அழியும் தோற்றம் போல என் முகவொளி மறைந்துகொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் என்னை விட்டுவிட்டு அவர் பொருள் ஈட்டும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 

அஞ்சா நெஞ்சத்துடன் தன் வேல் ஒன்றை மட்டுமே துணையாக வைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

தயிர் கடையும் ஒலிபோல் உருமிக்கொண்டு வரிப்புலியானது, தன் பெண்புலியின் பசியைப் பார்த்துத் தாங்க முடியாமல், பனைமரத்துச் செறும்பு போல் பருத்த மயிரும் சிறிய கண்ணும் கொண்ட பன்றி வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் வழியில் சென்றுள்ளார். 

பொந்து மரங்களின் நிழல் கோடுகளில் வழிப்போக்கர் அயர்வுக்குத் தங்கும் வழியில் சென்றுள்ளார். 

ஈரமே இல்லாத காட்டு வழியில் சென்றுள்ளார்.
2
ஆயிழைத் தோழியே! 

அவர் நம்மிடம் வராமல் இருக்கும்போது, வேனில் வந்திருக்கிறது. 

முருக்கம் பூ மணத்தை அருந்தி அதனைச் சிதரச் சிதர உதிரச் செய்துவிட்டு வந்திருக்கிறது. 

கூரிய வாயும், தீ அவிந்தது போன்ற மயிரும் கொண்ட வீட்டுக்கோழியின் சேவல் கழுத்து மயிரைச் சிலிர்த்துக்கொண்டு போரிடுவது போல வந்து, என்னைத் தாக்கிப் போரிடுகிறது. 

என் காதலர் மட்டும் வரவில்லை. 
என்ன செய்வேன். 
தோழியிடம் தலைவி சொல்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
கடையல் அம் குரல வாள் வரி உழுவை   5
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,         10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
2
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்   15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காதலோரே.                20

தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது.
கருவூர் நன்மார்பன் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

சேவல் சண்டை
கணவன் தன்னிடம் இல்லாதபோது வேனில்-காலம் இப்படிச் சேவல் தாக்குவது போல என்னைத் தாக்குகிறது என்கிறாள் தலைவி 

No comments:

Post a Comment