Pages

Wednesday, 21 September 2016

அகநானூறு Agananuru 276

பரத்தை வஞ்சினம் கூறுகிறாள்.


நீருக்குள் திரிந்து இரை தேடி அலையும் வாளைமீனுக்கும் அகப்படக்கூடாது. மேட்டில் அடி வைத்து நடந்து இரை தேடும் நாரைக்கும் அகப்படக்கூடாது என்று எண்ணி, நண்டு தன் பாதுகாப்பான வளை-இல்லத்துக்குள் புகுந்து அங்கும் இங்கும் சாய்ந்துகொடுத்துக்கொண்டு வாழும் துறையை உடையவன் அவன்.

இனி நடப்பது நடக்கட்டும். நாணம் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

அவன் என் தெருவுக்கு வரட்டும். ஒரு கை பார்த்துக்கொள்கிறேன் (தில்).

மை பூசிய கண்ணை உடைய அவன் மனைவியும், தோழியும் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மாலையையும், மேல் துணியையும் பற்றி இழுத்துச் சென்று மார்பில் அணைத்துக்கொள்வேன்.

ஆரியர் தாம் பழக்கிய பெண்யானையை அனுப்பி ஆண்யானையை அழைத்துவந்து பிடித்துக்கொள்வர்.

அது போல நான் அவனைத் தழுவிப் பிடித்துக்கொள்வேன்.

அப்படி நான் அணைத்துக்கொள்ளாவிட்டால் என் தாய் போற்றி வளர்த்த என் அழகு மற்றவர்களுக்குப் பயன்படால் கெட்டொழியட்டும்.

கெஞ்சிக் கேட்டவர்களுக்கு வழங்காமல் சேர்த்து வைத்திருப்பவன் செல்வம் போலப் பயன்படாமல் என் அழகு கெட்டொழியட்டும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு  5
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,                 10
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துக தில்ல, யாய் ஓம்பிய நலனே!         15

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பரத்தை

No comments:

Post a Comment