Pages

Tuesday, 20 September 2016

அகநானூறு Agananuru 272

வீடு தேடி வந்த என் காதலனைத் தாய் வேலேந்திய முருகக் கடவுள் என எண்ணி வழிபட்டாள். அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்ன ஆவது?


தலைவி தோழியை வினவுகிறாள்.

1
பெரிய கையை உடைய ஆண்யானை வலிமை மிக்க புலியைக் குத்தி அதனைக் கொன்றது. புலவு நாற்றம் அடிக்கும் தன் முகத்தைக் கழுவுவதற்காக, பெருமலைப் பிளவில் அணங்குப் பெண்கள் வாழும் அருவிக்கு வந்தது. அது நள்ளிரவு நேரம். 

அந்த இருளைப் போக்கும் ஒளியாகத் தன் கையில் இருந்த வேலை வைத்துக்கொண்டு அவன் தனியே வந்தான். வருத்தும் பனியை அவன் வெறுக்காமல் வந்தான். நீர் பாயும் இடத்தில் மலர்ந்திருந்த குளவி, கூதளம் ஆகிய பூக்களைக் கண்ணியாகக் கட்டி அவன் அணிந்திருந்த மாலை காற்றில் கலந்து கமகமத்தது. 

பெரிய பாறைக்கு அருகில் குறுகிய தாழ்வாரத்துடன் இருந்த நம் குடியில் அவன் புகுந்தான். 

அவனைப் பார்த்ததும் என் தாய்க்கு ஒரே மகிழ்ச்சி.
2
கடவுள் முருகன் வந்துள்ளான் என்று எண்ணிக்கொண்டாள். 
முகமன் கூறி வரவேற்றாள். 
பலி கொடுத்த குருதி கலந்த சிவப்புத் தினையைத் தூவி நீர் தெளித்து வரவேற்றாள். 
“நெடுவேள்” என்று கும்பிட்டு வழிபட்டாள்.
3
அந்தோ! என் நிலைமை என்ன ஆவது? 
பொன் போல் பூத்திருக்கும் வேங்கை மரத்தில் ஏறி மயில் அகவும் மலைநாடன் அவன். 
அவனோடு எனக்கு உள்ள தொடர்பு என்ன ஆவது?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,               5
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்    10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
2
''முருகு'' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!          15
3
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
கடவுள் முருகன்

No comments:

Post a Comment