Pages

Sunday, 18 September 2016

அகநானூறு Agananuru 269

கணவன் இல்லாத காலங்களில் மகளிர் தலையில் பூச் சூட்டிக்கொள்ளும் வழக்கம் பண்டைய தமிழகத்தில் இல்லை.

1
அவர் வந்துவிட்டார். உன் தோள் பெருக்கட்டும். உன் கூந்தல் பூச் சூடட்டும். இப்படித் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.
2
வெட்சிப் பூச் சூடி, பசுவினத்தைக் கவர்பவரிடமிருந்து, கரந்தைப் பூச் சூடி, அவற்றை மீட்டுவந்த அஞ்சா நெஞ்சம் படைத்த தறுகண் மழவனுக்கு கல்லைக் குடைந்து நடுகல் அமைப்பர். 

அந்தத் தறுகணாளன் ஆனிரை கவர்வோர் முன் அஞ்சாது எதிர்த்து நின்று மாண்டவன். 

வீசும் வேல்களைச் சுரையில் மாட்டிக்கொண்டு எறிந்து போரிட்டவன். அவன் பெயரை நிலைநிறுத்துவதற்காக நடுகல் பொறிக்கப்பட்டது. 
செத்துக் கிடக்கும் யானை போன்ற பெரிய பாறையில் பொறிக்கப்பட்டது. 

இது நட்டது போன்று நடப்படாத உயர்ந்த கல். 
வெளிப்புறம் குடைந்தெடுக்கப்பட்ட உருவம் தாங்கிய கல். 
அவன் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் கல். 

அதனை நீர் ஊற்றிக் குளிப்பாட்டுவர். 
மணக்கும் மஞ்சளை ஈரத்தோடு பூசுவர். 

இப்படிப்பட்ட நடுகல் இருக்கும் வழியில் இளம் வீரர்கள் சிவந்த நிறம் கொண்ட கரந்தைப் பூவைச் சூடிக்கொண்டு போர்க்கோலத்துடன் திரிவர். அவர்கள் திரியும் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார்.
3
இன்று மழைப் பருவத்தின் கடைசி நாள். 
காலை வேளை. (பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டில நேரம்)

மகளிர் குரவை ஆடும் நாள். 
மகளிர் இடையில் பொற்காசுகளை அணிந்திருப்பர். 
அத்துடன் நொச்சிப் பூவாலான தழையாடையும் அணிந்திருப்பர். 

தாங்கள் செய்து விளையாடிய வண்டல் மண் பாவைப் பொம்மையை, கொம்பு ஊதும் ஓசையுடன், நீர் உண்ணும் துறைக்குக் கொண்டுவருவர். 

அங்கே வைத்துக் குலவை ஒலி எழுப்பிக்கொண்டு குரவை ஆடுவர். 

அவர்கள் திருநுதல் மகளிர். 
இப்படி குரவை விழாக் கொண்டாடும் ஊர் வாணன் வாழும் சிறுகுடி என்னும் ஊர். 

இது கடல் கானல் நிலமும் தழுவி இருக்கும் ஊர். 
இந்த ஊரில் நெல் விளைந்திருக்கும் வயலில் செங்கழுநீர்ப் பூக்கள் பூத்திருக்கும். 

அந்தக் கழுநீர்ப்பூ போன்ற உன் கண்ணில் தளும்பும் கண்ணீர்ப் பனித்துளிகளைத் துடைப்பதற்காக, அவர் விரைந்து வந்திருக்கிறார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
2
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார்,            5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்    10
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
3
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்      15
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும்       20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.     25

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

அம்பறாத் தூணி
அம்பு வைக்கும் சுரை
இது போல் வேல் வைக்கும் சுரையும் இருந்தது

நடுகல்

இடை, பல் காசு நிறைந்த அல்குல் 

No comments:

Post a Comment