Pages

Sunday, 18 September 2016

அகநானூறு Agananuru 268

தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

1
தோழி! நீ அறியாமல் பேசுகிறாய். 
யானையும் புலியும் சண்டையிட்டுக்கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும். 
அங்குப் பூக்கும் வேங்கை, குளவி ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும். 
அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன். 

அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. 
அதனை நீ தேடித் தருவதென்றால் அவனிடம் செல்லும்படிக் கூறு. 
(வெறும் காமம் என்றால் வேண்டாம்).

யானை – அழகிய நெற்றியில் புள்ளிகளும் வரிகளும் கொண்டது.   
2
பழிக்கு நாணுதலும், உள்ளன்போடு கூடிய நட்பும் இல்லாதவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றால் அப்படிப்பட்டவள் என்னைத் தவிர வேறு யாரும் இந்த உலகிலேயே இருக்கமுடியாது. 

என் உயிர் போன்றவள் நீ. 
உன்னோடும் நான் கலந்து பேசவில்லை. 

மூங்கில் போன்ற சுற்றம் கொண்டவர் என் தந்தை. 
அந்தச் சுற்றத்தாருடனும் கலந்து பேசவில்லை. 

நானே என் இச்சைப்படி என் தந்தை வீட்டு வாயிலைக் கடந்து சென்று அவனோடு உறவு கொண்டேன். 
பெரும் பழிக்கும் ஆளானேன். 
என்ன செய்வேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய   5
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
2
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,           10
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!

குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது.
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பொறி வரிப் பூ நுதல் யானை

No comments:

Post a Comment