Pages

Friday, 16 September 2016

அகநானூறு Agananuru 265

அவர் தேடும் பொருள் அவ்வளவு பெரியதா?

1
அவர் நம்மை விட்டுவிட்டு ஈட்டும் பொருள் இமயமலை அளவு இருக்குமா

இமயம் - புகை போல் பொங்கி இருக்கும். 
வானளாவ உயர்ந்திருக்கும். 
பனி படர்ந்து அழல்-மீன் (Dog-star) போலத் தோன்றும்.
2
நந்தர் பாடலிபுரத்தில், கங்கை ஆற்றில் புதைத்துவைத்த செல்வத்தின் அளவு இருக்குமோ

நந்தர் புகழ் மிக்க அரசர்கள். 
பல போர்களில் வெற்றி கண்டவர்கள். 
பாடலிபுரத்தில் ஒன்று கூடி வாழ்ந்தனர். 
தம்மிடம் இருந்த மிகுதியான செல்வத்தைக் கங்கை ஆற்று நீருக்கு அடியில் மறைத்து வைத்திருந்தனர்.  
3
தோழி! வாழ்க! 

எதற்காக நாம் இங்கே கண்ணீரோடு ஒழிய விட்டுவிட்டு அவர் பொருள் தேடுகிறார்? 

என் கூந்தல். 
நெருங்கிய கூந்தல். 
ஒளி தரும் நிழலில் இருக்கும் ஆற்றுமணல் படிவு போன்ற கூந்தல். 
குரல் பின்னல் போட்ட குழல்-கூந்தல். 

இந்தக் கூந்தலுக்கிடையே என் கண்ணின் பாவை அவரைத் தேடி வருந்துகிறது. 

என் வளையல்கள் கழல்கின்றன. 

துன்புறுகிறேன். 
கண்ணில் பனி தழும்புகிறது. 
இப்படி விட்டுவிட்டுப் பொருள் தேடுகிறாரே.
4
வல்வில் ஆடவரும் யானையும் வாழும் போர்முனையாகிய வேங்கட மலையைத் தாண்டிப் பொருள் தேடுகிறார். 

வல் வில் கொடு நோக்கு ஆடவர் 

வேங்கடம் பகுதியில் வாழும் மக்கள். 
வில் எய்து ஆண் விலங்குகளை வேட்டையாடுவர். 
நல்ல தசைகளை நெருப்பிலிட்டுப் பொசுக்கித் தின்பர். 
நீருக்காகத் தோப்பிக் கள்ளைப் பருகுவர். 
வளைந்த வில்லும், கொடிய பார்வையும் கொண்டவர்கள். 
கையையும் வாயையும் கழுவாமல் துடி முழக்குவர். 
ஊரில் இருக்கும் மரா-மர மன்றத்தில் ஆடுவர். 
அங்கு யானைகள் மிகுதி.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
2
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை     5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
3
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு      10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
4
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,                         15
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்       20
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இமயச் செவ்வரை
( = பனி படர்ந்த செங்குத்ததான மலை)

No comments:

Post a Comment