இது குளிர்கால மாலைப்பொழுது.
அவர் போர்க்களத்தில்,
நான் இல்லத்தில்.
1
மழைமேகம் இல்லாத வானத்தில் மீன்கள் இருப்பது போல முசுண்டைப் பூக்குலைகள் வெண்ணிறத்தில் பூத்துக் கிடக்கின்றன.கோவலர் வெண்காந்தள் மலர்களைச் சூடிக்கொண்டு, கையில் கோலுடன், பொழுது இறங்கும் நேரத்தில், ஆனிரைகளுடன் ஊர் திரும்புகின்றனர்.பெருமழை பொழிந்த நீர் தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது.மாலை முரசம் முழங்குகிறது.இந்த நிலையில் வந்திருக்கும் குளிர்கால மாலைப் பொழுது இது.
2
அவர் வேந்தன் போர்ப் பாசறையில் இருக்கிறார்.இந்தக் குளிர்கால மாலைப் பொழுதில் என் துடிப்பு அவருக்குத் தெரியாமல் போனாலும், அவர் நிலைமை பற்றியாவது எண்ணிப்பார்க்க வேண்டாமா?யானைப்படை இருளில் மூழ்கிக் கிடக்கிறாரே!
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை
1
மழை இல் வானம்
மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை
வாலிய மலர,
வரி வெண் கோடல்
வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர்
கோல் கோவலர்,
எல்லுப் பெயல் உழந்த
பல் ஆன் நிரையொடு, 5
நீர் திகழ் கண்ணியர்,
ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி
தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர்
தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு
சிறந்து நனி மயங்கி,
கூதிர் நின்றன்றால், பொழுதே!
காதலர் 10
2
நம் நிலை அறியார்
ஆயினும், தம் நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை
கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ் சின வேந்தன்
பாசறையோரே? 15
பருவம் கண்டு, வன்புறை
எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம்
ஆம்.
உம்பற்காட்டு இளங்கண்ணனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment