Pages

Friday, 16 September 2016

அகநானூறு Agananuru 263

இப்படி அவனுடன் சென்றுவிடுவாள் எனத் தெரிந்திருந்தால் 
நான் இந்த வீட்டிலேயே திருமணம் செய்து கொடுத்திருப்பேனே, என்கிறாள் தாய்.

1
உலகம் தொழும்படியாக ஞாயிறு அலை மோதும் கடலில் தோன்றுகிறது. 
குளம் வற்றும்படி அது தன் வெயிலைப் பாய்ச்சுகிறது. 
நல்ல நிலத்தைப் பயன்றறதாக மாற்றியிருக்கும் பசுமை தோன்றாத காலம் இது.
2
பல்வேறு பாதைகள் பிரிந்து செல்லும் காடு இது. 

எந்தப் பாதையில் புதியவர்கள் வருவர் என்று வில்லும் கையுமாக அங்குள்ள ஆண்கள் ஆள் மேல் ஆள் ஏறி நின்று வேவு பார்த்துக்கொண்டிருப்பர். 

உயர்ந்த ‘யா’ மரத்தின்மீது ஏறியும் பார்த்துக்கொண்டிருப்பர்.

அந்த வழியில் அந்தக் கல் நெஞ்சக்காரனோடு என் மகள் சென்றுவிட்டாள். 

இப்படிச் செல்லத் துணிந்தது தெரிந்திருந்தால்,

ஐயகோ!
3
கோதை அரசன் தன் வேல் வலிமையுடன் பாதுகாக்கும் வஞ்சி நகரம் போல் விளங்கும் என் வளமனை பொலிவு பெறும்படி, நானே அவர்களோடு மாறுபாடு (துனி) இல்லாமல் கூட்டிவைத்திருப்பேனே! 

அழகிய முகம் (நெற்றி – ஆகுபெயர்) கொண்ட என் மகளின் வளரும் முலையில் அவன் துயிலும்படி (முதல் இரவு கொள்ளும்படி) செய்திருப்பேனே!

இப்படிச் சொல்லித் தாய் கலங்குகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
2
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,         5
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ!   10
3
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!           15

மகட் போக்கிய தாய் சொல்லியது.
கருவூர்க் கண்ணம்பாளனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

படம் | காதலன் மேல் காதலி
பாடல் | ஆள் மேல் ஆள் | வருவோரைத் தேடும் வழிப்பறிக்காரர்கள்

No comments:

Post a Comment