Pages

Wednesday, 14 September 2016

அகநானூறு Agananuru 258

குறியிடம் மாறியதால், 
காதலியைப் பெற முடியாமல் போய்க் 
கலங்கும் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

1
நன்னன் உதியன் என்பவன் பாழி என்னும் மலைக்காட்டில் இருந்த பாழி என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன். 

வேளிர் குடியினரில் தொன்மையான குடியினர் தன் பொன்னை அந்தப் பாழி நகரில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். 
அதனை யாரும் கைப்பற்ற முடியாது. 

அதுபோல நீ விரும்பியவளையும் உன்னால் அடைய முடியவில்லை. நெஞ்சே! 
உன்னால் இதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  
2
பெருங்காற்றுடன் குளிர்ந்த மழைமேகம் தவழும் குன்றத்தின் பரப்பில் உள்ள மாய இருள் குகையில் இருக்கும் கல்லுப் பாறை போல், நெஞ்சே! நீ இருண்டு கிடப்பாயாக.
3
மென்மையான இயல்பை உடைய குறுமகள் அவள். 
அவள் காதல் உறவைப் பெறலாம் என்று நாள்தோறும் எழுந்த ஆசையோடு பாம்பு இரையைத் தேடிக்கொண்டிருக்கும் நள்ளிரவில் சென்றாய். 

பெற முடியவில்லை.
4
அருள் தோன்றும்படி, கண்ணீர் விட்டுக் கலங்குகிறாய். 
உலகில் உள்ளவர்களுக்கு இது நகைப்புக்கு இடமளிக்கும் செயல். 

என்றாலும் காமம் எல்லை கடந்து உறுத்தும் பெருந்துன்பத்தைத் தந்திருக்கிறாய். என்ன செய்வேன்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட்
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
2
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்  5
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல,
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
3
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,       10
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
4
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
காமம் கைம்மிக உறுதர,
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!    15

அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

இருள் அளை
காதலியைப் பெறாத நெஞ்சே!
இந்த இருட்டுப் பாறை போல் இருண்டு போ 

No comments:

Post a Comment