Pages

Thursday, 8 September 2016

அகநானூறு Agananuru 242

வேலன் வந்து, வெறியாட்டு என்னும் பெயரால் விழாக்களம் அமைத்து, ஆட்டுக்குட்டியை வெட்டிப் பலி கொடுத்து, என்னைப் பிரம்பால் அடித்துப் பேய் ஓட்டினால், என் காதலனுக்காக ஏங்கும் என் மேனி பழைய நிலைக்குத் திரும்பிவிடுமா? தலைவி தோழியை வினவுகிறாள்.

1
அது மயில் ஆடும் சோலை. ஆடும்போது, அரும்பு முதிர்ந்து பூத்திருக்கும் வேங்கை மலரிலிருந்து பொன்னிற மகரந்தப் பொடிகள் நீல மயிலின் தோகையில் கொட்டும் சோலை. அங்கு விளைந்திருந்த தினையை உண்ண வரும் கிளிகளை நாம் ஓட்டியபோது அவனும் நம்முடன் இருந்து ஓட்டினான். அவன் என்னிடம் நடந்துகொண்ட பாங்கால், அவனைக் காணவேண்டும் என ஏங்கி என் உடலும் உள்ளமும் வாடுகின்றன.
2
இதனை அறியாமல் என் தாய் வேலனை அழைத்து “என் மகளின் தளிர் போன்ற மேனி வாடுகிறது” என்றாள். காரணம் அறியவேண்டி வேலன் என்னைப் பிரம்பால் அடித்தான். தாய் வெறியாடும் களம் அமைத்துக் கொடுத்தாள். அந்தக் களம் பொலிவுறும் வண்ணம் ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்தனர்.
3
(இதனால், என் மேனி நலம் பெறுமா?) வளையல் நழுவும் முன்கையும், வாடிய தோளும் பண்டைய அழகைப் பெறவேண்டுமானால், வளர்ந்துவரும் என் முலை முழுகும்படி பலமுறை அவனைத் தழுவவேண்டும் அல்லவா, தோழி, இது உனக்குத் தெரியாதா? 
4
நறவ மரம் வளர்ந்திருக்கும் குளிர்ந்த பூஞ்சோலையின் பெருமலைப் பிளவில் வளர்ந்திருக்கும் சந்தன மரத்தில் தேன்கூடு தொங்கும் மலையின் தலைவன் அவன். அவனைத் தழுவிய மார்பு அல்லவா, இது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம்,  5
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், ''நுண் கேழ்
2
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்'' என, பல் பிரப்பு இரீஇ,
அறியா வேலற் தரீஇ, அன்னை     10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
3
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,   15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ தோழி!
4
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
சாந்த மென் சினை தீண்டி, மேலது        20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
பேரிசாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

சந்தன மரச் சோலை, மூணாறு, கேரள மாநிலம்

No comments:

Post a Comment