Pages

Saturday, 6 August 2016

பரிபாடல் Paripadal 20

காதலர் கனிந்து விளையாட மகிழ்விப்பதே வையைப் புனலுக்கு இயல்பு என்று சொல்லி இந்தப் பாடல் முடிகிறது.
1
கடல் குறையும்படி மேகம் நீரை முகந்து சென்று, கருவுற்று, மலையில் மாலை போல் முற்றுகையிட்டு, இடி முழக்கத்திடன் மழையாகப் பொழிந்தது. புலியைக் குத்திய தன் கொம்புகளை யானை அந்த மழைநீரில் கழுவிக்கொண்டது.
2
கடலில் குளித்துவிட்டு எழுந்து வந்த கதிரவன் மாலையில் மலைமகளை மணந்துகொண்டு போய்விட்டான். வான்மழை மண் சூட்டை ஆற்றும் வகையில் பொழிந்தது. மரத்தில் இருக்கும் பூக்களின் மணம், அதில் இருக்கும் தேனின் மணம், வயலில் வெயில் படிந்திருந்த மணம், கார்மழையில் காட்டில் உதிர்ந்து கிடக்கும் பழங்களின் மணம் – இவை எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வையை நீர் வந்தது.
3
வையை வெள்ளத்தை மக்கள் மணம் வீசுவதால் அறிந்துகொண்டனர். வையையாற்றுப் பொழில்மணம் ஓசனை தூரம் குதுகுதுத்தது. புனலாட்டு விழா என்று ஊரில் பறை முழக்கப்பட்டது.
குதிரை பூட்டிய தேர்
பரபரப்பில் இந்த வங்கத்தில் பாண்டில் மாடுகளைப் பூட்டினார்களாம்
பாண்டில் (எருது) பூட்டிய வங்கம்
பரபரப்பில் இந்த வங்க வண்டியில் குதிரைகளைப் பூட்டினார்களாம்
4
வெள்ளத்தின் ஓசை கேட்டு மக்கள் துயில் எழுந்தனர். தேரில் பூட்டவேண்டிய குதிரைகளை வங்கம் என்னும் வில்லு வண்டியில் பூட்டினர். வண்டியில் பூட்டவேண்டிய பாண்டில் எருதுகளைத் தேரில் பூட்டினர். குதிரையில் ஏறவேண்டியவர் யானை மேல் ஏறினர். யானையில் ஏறவேண்டியவர் குதிரை மேல் ஏறினர். மகளிர் அணியவேண்டிய கோதைமாலையை மைந்தர் அணிந்துகொண்டனர். மைந்தர் அணியவேண்டிய தார்மாலையை மகளிர் அணிந்துகொண்டனர். இத்தனை மாற்றங்களும் முந்திச் செல்லவேண்டும் என்னும் பரபரப்பால் நிகழ்ந்தன.
5
சங்குகள் ஏறிக் கிடக்கும் மணல் மேட்டு முகடுகளில் மகளிர் பொய்தல் விளையாடினர். அது மணலில் வண்டுகள் மேய்வது போலவும், மாடிவீட்டு மணலில் கூடல்வட்டம் போட்டு விளையாடுபவர்கள் போலவும் காணப்பட்டது. இது வையை ஆற்றின் நிலை.
6
பூங்கோதையர் சிலர் புகைக்கும் பொருள்களை வைத்திருந்தனர். ஆண்கள் தார்மாலை கட்டி அணிந்துகொண்டனர். பெண்கள் கோதைமாலை கட்டி அணிந்துகொண்டனர். சூட்டுமலர், கண்ணிமலர், மோட்டுவளையம், இயல்பாக உடலில் அணியும் அணிகலன்கள் முதலானவற்றை அணிந்துகொண்டு ஒருவரை ஒருவர் அழகு பார்த்துக்கொண்டனர். ஒருத்தி தனக்கு வளையாரம் போட்ட ஈத்தானொடு (கணவனொடு) சென்றாள். அவன் அருகில் வேறொருத்தி வந்தாள். அவள் பரத்தை. அவளை அவன் தன்னுடன் மனைவி இருக்கிறாளே என்று முறைத்துப் பார்த்தான்.
7
முன்பு தனக்கு இன்பம் தந்த கள்வன் இப்போது சமழ்ப்புடன் பார்த்ததும் தன் கண் அம்பை அவன்மீது எய்த பரத்தை கூட்டத்தில் ஓடி ஒளிந்துகொண்டாள்.
8
இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருத்தி இவளுக்கு இவனோடு என்ன தொடர்பு என்று கேட்பாள் போல வையை மணலைக் காலால் எத்திக்கொண்டு சென்றாள். 
9
மாற்றாள் மகள் ஒருத்தி சிரித்துக்கொண்டே அவர்களது வாயைக் கிண்டினாள்.
10
ஆயத்துத் தோழி ஒருத்தி பரத்தையின் பண்புகளைப் பற்றிப் பேசுகிறாள். 
  • மாயப்பொய் பலவற்றைக் கூட்டிச் சொல்லி, தன் காமத்தை விற்பவள். 
  • தன் பெண்மையைப் பொதுமையாக்கி ஒருவனோடும் பிணிப்பு இல்லாமல் இருப்பவள். 
  • ஐம்புலன்களை அள்ளித் தூற்றும் நீர்த்தொட்டி. 
  • முற்றாத கள்ளை ஊற்றித் தரும் காரிகை. 
  • காம வயலில் ஏர் பூட்டி உழுபவர்களுக்கு மூடியைத் திறந்து வைத்திருக்கும் கள்ளுக் குடம். 
  • கண்ணைக் கயிறாக்கி, ஆண்கள் தோளைக் கட்டிப் போட்டு, தன்னை யாழாக்கி, அவன் தன் நரம்புகளைத் தடவுமாறு செய்யும் பொதுமகள்.

11
அவள் பொய்தல் விளையாடும் மகளிர் காண வருவாள். வையை ஆறாகிய மாட்டுத் தொழுவத்துக்கு வருவாள். அணிந்திருக்கும் மத்திகை மாலையால் ஆண்களை இடிப்பாள். பலர் முன்னிலையில் காம உழவு செய்வாள். எனக்குக் கடன் பட்ட உழவர்களுக்கு என் மார்பைத் தண்டமாகத் தருவேன் என்பாள்.
12
இப்படிப்பட்டவளைச் சிலர் ஏசினர். அவள் மேல் பிணக்குக் கொண்டனர். வையை வீட்டில் இவை நிகழ்ந்தன. சிந்தித்தால் புரியும். இவள் பிணியாள். இவளைச் சேராதீர்கள். மடமயில் போன்ற மனைவியை வணங்க வாருங்கள். – என்று சிலர் கூறினர்.
13
அது கேட்ட பரத்தை “நீ கூறுவன மனப் பிரமை. உயர்ந்தவர் யார் யாரைத் தொழுவது?” என்று ஏதோ கூறினாள். மாற்றாளை மாற்றாள் மடக்கிப் பேசுவது இயல்புதானே!
14
பரத்தையின் சொல்லைக் கேட்ட ஒருத்தி சொல்கிறாள். ஆண்களை முரசு முழக்கத்துடன் அழைக்கிறாய். நான் அணிந்திருக்கும் வளையல் என் தந்தை எனக்குத் தந்தது. உன் வளையல் உனக்கு எப்படி வந்தது என்று சொல்லிவிட்டுப் பெருமிதமம் கொள் – என்றாள்.
15
நான் மாலை அணிந்துகொள்வதற்காக அவன் எனக்குத் தந்தான். பெண்ணே! உன் காலில் இருக்கும் சிலம்பையும் அவன் கழற்றி எனக்குத் தருவான். உனக்கு அன்பன் எனக்கும் அன்பன். அவன் கள்வன். கள்ளத்தனம் செய்யும் கள்வி நான் இல்லை. – என்று பரத்தை சொன்னாள்.
16
வசியம் செய்யும் மானே! என்னோடு மாறுக்கு மாறு பேசுவதை நிறுத்திக்கொள். உன்னை விரும்பி வருபவர்களுக்குத் தரவேண்டியதை மட்டும் தேடிக்கொள். – என்றாள் பரத்தையோடு மாறுப்பட்டுப் பேசும் பெண்.
17
படுக்கைக்கு இனியவள் மனைக்கு ஒருவன் செல்வான் ஆனால், அவனைக் காப்பாற்ற முடியுமா? முடியாது. அவனையும் சான்றாண்மை உள்ள பெண்கள் போற்றி வணங்குவர். இதனை அறியாமல் நீ சொல்கிறாய். இன்பம் தரும் பெண்களை அணைத்த கணவன் மார்பை மனைவி வெறுத்து ஒதுக்குவாள். எனினும் காமம் அவளை விட்டுவைக்காது. இது எல்லார்க்கும் பொதுவான இயல்பு. என்மீது சினம் கொள்ள வேண்டாம். – என்று அவள் தொடர்ந்தாள்.
18
இப்படிப்பட்ட பிணக்குகளை உண்டாக்கிப் போக்கி வைப்பது தென்னவனின் வையைப் புனலுக்கு இயல்பு.
19
வையை ஓரத்தில் பூத்திருந்த மலர்களில் சில, மகளிர் விரல்கள் மூடுவது போலக் குவிந்தன. சில பாம்பு படம் எடுப்பது போல் விரிந்தன. சில குடை விரிப்பது போல் பூத்தன. சில சுனையை விட்டு நழுவின. சில அரும்புநிலையில் அவிழ்ந்தன. சில கொட்டும் அருவியில் அடிபட்டு, குகை வழியே சென்றன. யானை நீரைப் பருகித் தெளித்துக் கொள்வது போல கூடல் நகர மதிலில் வையை நீர் மோதியது.
20
இப்படி நாம் விரும்பும் நட்பும், ஊடலும், கூடலும், காமமும், கள்ளும், தந்து காதலர் புணர்ந்து விளையாட மகிழ்விப்பதே வையைப் புனலுக்கு இயல்பு.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
20. வையை
1
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.      5
2
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;           10
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.
3
தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில்
4
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,       15
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
மகளிர் கோதை மைந்தர் புனையவும்,              20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
5
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
மாட மறுகின் மருவி மறுகுற,  25
கூடல் விழையும் தகைத்து தகை வையை.
6
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் 30
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க,           35
7
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.
8
என ஆங்கு,  40
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்'
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன
மறலினாள், மாற்றாள் மகள்.     45
9
வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.
10
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்   50
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்     55
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
11
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,   60
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்.
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்   65
12
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து.
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
வந்திக்க வார்' என 70
13
'மனத் தக்க நோய் இது;
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.'
14
'...சொல் நல்லவை நாணாமல்    75
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.'
15
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்           80
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு
16
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு 85
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.
17
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;               90
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல்!
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'           95
18
என ஆங்கு
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு.
19
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,        100
குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து    105
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.
20
நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,    110
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு.

பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
                               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

1 comment:

  1. பரத்தை பற்றிய விளக்க உவமைகள் உருவகங்கள் சுவையாக உள்ளன

    ReplyDelete