Pages

Tuesday, 30 August 2016

அகநானூறு Agananuru 219

எனக்காக ஒரு முடக்கு பால் குடித்தாய், 
தந்தைக்காக ஒரு முடக்கு பால் குடி 
என்று தாய் தன் மகளுக்குப் பால் ஊட்டினாளாம்.

1
அகன்ற இடம் கொண்ட வீட்டில், என் மகள், விளையாட்டுத் தோழிமாரோடு சிலம்பு ஒலிக்க ஓடி, சிறிது நேரம் பந்து விளையாடினாலும், இடையிலே அழைத்துப் பாராட்டுவேன். 

பகன்றை மலரில் பனி நிற்பது போல நுரையுடன் கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்துக்கொண்டு, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, “எனக்காக ஒரு முடக்கு பால் குடித்தாய், உன் தந்தைக்காக ஒரு முடக்கு பால் குடி” என்று சொல்லி ஏமாற்றிப் பால் ஊட்டுவேன். 

பிறந்தது முதல் அவளை அழகு படுத்துவேன். 
அவள் என் மகள். 
கையில் பொன்வளையல் அணிந்திருப்பாள். 

அவள் இப்போது அறநெறி இல்லாமல் அவளை அழைத்துச் சென்ற ஒருவனோடு ஓடிவிட்டாள். 
மறக்க முடியவில்லை. 
இரவெல்லாம் நெஞ்சு வருந்துகிறது.
2
பொன்னால் செய்யப்பட்டது போலக் கூர்மையான பற்களை உடைய செந்நாய் துரத்தத் தப்பி ஓடிவந்த மான் விளாமரத்து அருநிழலில் விளாம்பழத்தை உண்ண முயன்றுகொண்டிருக்கும். 

அப்போது தீ எரிவது போன்ற வெப்பத்துடன் கோடைக் காற்று வீசும். 

அந்த ஒலியைக் கோவலர் ஊதும் குழல் ஒலியாடு ஒப்பிட்டு அந்தமான் நினைத்துப் பார்க்கும். 

அந்த வழியில் இந்த நேரத்தில் என் மகள் நடந்து சென்றுகொண்டிருப்பாளோ, ஒரே கவலையாக இருக்கிறது. 

செவிலி இப்படி எண்ணிக் கவலை கொள்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
''வாராயோ!'' என்று ஏத்தி, பேர் இலைப்
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,        5
''என் பாடு உண்டனை ஆயின், ஒரு கால்,
நுந்தை பாடும் உண்'' என்று ஊட்டி,
''பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து, யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள், இனி'' என,                  10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
2
''பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்  15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்,
நடக்கும்கொல்? என, நோவல் யானே.

மகட் போக்கிய தாய் சொல்லியது.
கயமனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

ஒரு மான்
காற்றில் வரும் ஓசையைப்
புல்லாங்குழல் இசை என்று
எண்ணிப் பார்த்ததாம் 

No comments:

Post a Comment