Pages

Sunday, 28 August 2016

அகநானூறு Agananuru 213

வேங்கடத்தைக் கடந்து, 
வடுகர் தேயத்துக்குச் சென்றாலும் 
திரும்பி வரக் காலம் தாய்த்த மாட்டார் 
என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  

1
தொண்டையர் ஆளும் நாடு வேங்கடம்
அங்கு மேகக் கூட்டம் தவழும் மலைமுகடுகளில் அருவி கொட்டும்.
2
அதனைத் தாண்டிச் சென்றால் வடுகர் தேயம்

வடுகர்கள் விடியற்கால நேரத்தில் அதிரல் பூக்களைத் தம் தலையில் போட்டிருக்கும் பித்தை முடியில் சூடிக்கொண்டு பகைவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவர். 

அவ்வாறு அவர்கள் கவர்ந்துகொண்டு வருவதற்காக, பூவில் வடித்தெடுத்த நறவுக் கள்ளை அவர்களுக்குத் தருவார்கள். வெண்ணிற அரிசிச் சோற்றுடன் தருவார்கள்.
3
அவர்கள் வாழும் இடம் நிழலே இல்லாத வெட்டவெளி. 
வெயிலானது தீப் போல எரிக்கும். 
அதில் நெடுந்தொலைவு செல்லவேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமல் உன் காதலர் செல்லத் துணிந்துள்ளார்.
4
சென்றாலும் நீண்ட காலம் தங்கமாட்டார். 
வானவன் ஆளும் கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் செழித்திருக்கும் மூங்கில் போன்ற உன் தோள் நலம் சிதையும்படி விட்டுவிட்டு நீடலர். (காலம் தாழ்த்த மாட்டார்).
    • கொல்லிக்குடவரை – வெல்போர்  வானவனுக்கு உரியது. 
    • மரங்கள் வெட்டப்பட்ட புனக் காட்டில், பொழுது போன நேரத்தில், எரியும் தீப் போலத் திருமணிக் கற்கள் மின்னும் நிலப்பரப்பினைக் கொண்டது.  
ஆன்றோர் வாழும் பெறமுடியாத உலகமும், அமிழ்தமும் கிடைப்பினும் நீடலர்.
5
சோழர் அணிலன்களை வழங்குவதற்காக வளைந்த கையை உடையவர்கள். 
வெற்றி தேடித்தரும் வாளினை உடையவர்கள். 

அவர்களின் காவிரியாற்று மணலில் படிந்திருக்கும் அறல் போன்ற நெளிநெளியான உன் கூந்தலிலும், இன்பம் பயக்கும் (இன் உறல்) உடலிலும் ஒன்றிக் கிடப்பதை மறந்துவிட்டு நீடலர்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
2
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,      5
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
3
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,   10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல் செலப்
4
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை      15
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று, தாம் நீடலோ இலரே என்றும்
5
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை,        20
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்,
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
தாயங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment