Pages

Saturday, 27 August 2016

அகநானூறு Agananuru 209

தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

1
அழாதே (ஆழல்) தோழி. 
பல்லாண்டு வாழ்க. 

“என் தோள் பழைய பொலிவை இழந்துவிட்டது. 
அதனைப் பார்த்துத் தாயும் நாள்தோறும் வருந்துகிறாள். 
ஊரே அலர் தூற்றுகிறது. 

தலையாலங்கானம் போரில் செழியன் (தலையாலங்கானச் செரு வென்ற நெடுஞ்செழியன்) எழுவர் கூட்டணிப் படையை வென்றபோது வெற்றி ஆரவாரம் செய்தது போல அலர் தூற்றுகின்றனர்” என்று சொல்லிக்கொண்டு அழவேண்டாம்.  

செழியன், தென்னர் கோமான் எனவும், 
’இயல்தேர் செழியன்’ எனவும் 
போற்றப்பட்டவன். 
கணையமரம் போன்ற தோளை உடையவன். 
அழகிய வேலைப்பாடுடைய தேரில் ஏறிப் போரிட்டவன்.
2
யானைப் படையை நடத்தி வீரப்போர் புரியும் அரசன் புல்லி
இவன் நாடு மூங்கிலடர்ந்த வேங்கடம். 

இந்த வேங்கட மலையைக் கடந்து சென்றிருந்தாலும், அவர் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டார்.
3
முள்ளுர் மன்னன் காரி. (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) 
இவன் சிறந்த வேல் வீரன். 
காலில் வீரக்கழல் அணிந்தவன். 
இவன் ஓரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) அரசனைக் கொன்றான். 
ஓரி வில் வீரன். 

வென்ற கொல்லிமலை நாட்டைக் காரி சேரலர்களுக்கு (சேரர்களுக்கு) வழங்கினான். 

கொல்லிமலையில் கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பாவை (பெண்தெய்வப் புடைப்போவியம்) உள்ளது. 

அந்தப் பாவை போன்று அழகு மிக்கவள் நீ. 
உன் அழகை அவர் நினைக்காமல் இருக்கமாட்டார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது'' என,
2
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து    10
உள்ளார் ஆதலோ அரிதே செவ் வேல்
3
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,  15
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
கல்லாடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

படங்கள் - 
இக்காலத்தில் கொல்லிப்பாவை எனப் 
பிற தளங்களில் காட்டப்பட்டுள்ள உருவங்கள்



கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை

No comments:

Post a Comment