Pages

Saturday, 27 August 2016

அகநானூறு Agananuru 208

தன்னைத் தழுவி இன்பம் தந்த காதலி எப்படிப்பட்டவள் என்று காதலன் நினைத்துப் பார்க்கிறான்.

1
அரசன் ஆய்-எயினன் சிறந்த வள்ளல். 
வெளியன் வேண்மான் (வேளிர் குடி மகன்) என்பவனின் மகன். 
தேமுது குன்றம் அவன் நாடு. 

கையில் சிறிய கோலை வைத்துக்கொண்டு குறி சொல்லும் குறிக்கக்காரர்கள் அவன் குன்றத்தைச் சிறப்பித்துப் பாடுவர். 

யாமத்து இரவாயினும் சரி. அவர்கள் பாடினால் அவர்களுக்குத் தந்தம் கொண்ட யானையைப் பரிசாக நல்குவான்
2
பாழி என்னும் ஊரில் எயினன் பறவைகளைப் பேணி வளர்த்துவந்தான். 
அந்த ஊர் பாழிப்பறந்தலை என்னும் போர்க்களமாக மாறியது. 
மிஞிலி அவனைத் தாக்கினான். 
யானைப்படையும் தேர்ப்படையும் கொண்டு தாக்கினான். 
எயினன் வாளேந்திப் போரிட்டான். 
நண்பகல் வேளையில் பெருங்காயம் பட்டுப் போர்க்களத்தில் எயினன் வீழ்ந்தான்.
3
அவன் பேணிவந்த பறவைகள் வானத்தில் பறந்து வெயில் அவன்மேல் படாமல் சிறகுகளை விரித்து நிழல் செய்தன. 
“இந்தக் காட்சியை நான் காணமாட்டேன்” என்று நன்னன் சொல்லிவிட்டான்.
4
இந்த நன்னன் போரை மூட்டியவன் (உருவினை). போர்க்களத்துக்கு வரவில்லை. 
எயினன் மேல் அருளும் காட்டவில்லை. 
ஒளிந்துகொண்டான்.
5
இதனால் பதைபதைத்துப் போன (பெருவிதுப்பு) வேளிர் குடி மகளிர் அகுதை அரசனிடம் முறையிட்டுக்கொண்டனர். 

செம்பூ மாலை அணிந்த மார்பில் அடித்துக்கொண்டு முறையிட்டுக்கொண்டனர். 

வேளிர்க்கு நேர்ந்த பழியைப் போக்கும் வகையில் அகுதை பெரும்படையுடன் சென்று நன்னனைப் பழிவாங்கினான். 

அகுதை வேள்மகளிர் துன்பத்தைப் போக்கியது போல என் காதலி என் துன்பத்தைப் போக்கினாள்.
6
உப்பால் கரை போட்டு வெள்ளத்தைத் தடுக்க முடியுமா? 
அப்படித்தான் அவளது காமத்தை அவளது நாணத்தால் தடுக்க முடியவில்லை. 
அவள் என்னிடம் வந்தாள். 
தன்னை எனக்குக் கொடுத்தாள். அவள் வாழ்க.
7
ஓரி அரசனின் கொல்லிமலை பலாப்பழம் மிக்கது. 
அங்கே காந்தள் பூக்கள் (கார்மலர்) மணம் கமழும். 
அந்த மணம் தன்மேல் கமழும் மேனியை உடையவள் அந்த மாயோள். 
அந்த மாயோள் தன்னை எனக்குத் தந்தாள். அவள் வாழ்க.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி
1
யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,         5
2
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு
3
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று   10
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான்'' எனப்
4
படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
5
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்        15
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை களைதந்தாங்கு, மிகு பெயல்
6
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,                20
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
7
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
கார் என்றும் காந்தள் என்றும்
கார்த்திகை என்றும் வழங்கப்படும் மலர்
புதுப்பெண்ணின் உடல் மணம்
இந்தப் பூவின் மணம் போல் இருக்குமாம்

No comments:

Post a Comment