Pages

Wednesday, 24 August 2016

அகநானூறு Agananuru 202

கவலைப் படும்படி இரவில் வரவேண்டாம், 

தோழி தலைவிக்காக வேண்டுகிறாள். 
1
தெளிந்த வெண்ணிறத்தில் தோன்றும் அருவியுடன் கூடிய மலைப்பிளவில் பெண்யானைகளும் கன்றுகளும் கொண்ட யானைக் கூட்டம் பெருமிதம் கொள்ளும்படி ஆண்யானை புலிப்பகையை வென்று தன் புண்ணின் வலி தாங்காமல் தன் கையை உயர்த்திக்கொண்டு பெருமூச்சு விடும். 

அப்படி யானை விடும் பெருமூச்சு கொல்லன் உலைக்களத்தில் காலால் மிதிக்கும் துருத்தி காற்றை வெளிவிடுவது போல இருக்கும். 

துருத்திக் காற்றால் உலையில் தீப்பொறி பறக்கும். அந்தத் தீப்பொறிகள் மின்மினிப் பூச்சிகள் போலத் தோன்றும். 

யானையின் பெருமூச்சில் வரும் நீர்த்துளிகள் நீல நிறத்தில் புதர்ச்செடிகளின் மேல் படியும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் தலைவன்.
2
நாடனே!

படமெடுத்து ஆடும் பாம்பின் தலை அடங்கும்படி இடி இடிக்கும் காலத்தில் கையிலிருக்கும் வேல் (எஃகு) ஒன்றை மட்டுமே துணையாகக் கொண்டு, இரவில், நல்ல இருட்டு வேளையில், கல்லிடுக்குக் காட்டுப்பாதையில் (அதர்) விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நீ வருகிறாய். 

உன்னை நினைத்துக்கொண்டு துன்பத்தில் நீந்திக்கொண்டிருப்பது நான் மட்டுந்தானே? 

எனவே இப்படி இரவில் வரவேண்டாம் என்று தலைவியின் எண்ணத்தைத் தோழி தலைவனுக்கு வெளிப்படுத்துகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறு வீ  கொல்லன்    5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போல, பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
2
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
உத்தி அரவின் பைத் தலை துமிய,        10
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே?          15

இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.
ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கொல்லன் குருகு மிதி உலை

No comments:

Post a Comment