Pages

Wednesday, 24 August 2016

அகநானூறு Agananuru 201

தலைவன் பிரிவால் வாடும் தலைவியைத் 
தோழி தேற்றுகிறாள்.


1
தோழி, இதைக் கேள்.
பொன்னால் செய்த ஓடை அணியை நெற்றியில் பூண்டிருக்கும் யானை, போர்த்தொழில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் யானை, - இப்படிப்பட்ட யானைமீது ஏறி வெற்றி கண்டவன் ‘விறற்போர்ப் பாண்டியன்’. இவன் ஆட்சிக்கு உட்பட்டது கொற்கை முன்துறை.
2
இந்தத் துறையைப் பழையர் இன மகளிர் வழிபடுவர். 
அந்தத் துறையில் கிடைத்த ஒளி திகழும் முத்துக்களையும், சங்குகளையும் துறைத் தேவிக்குச் சொரிந்து வழிபடுவர். 
வழிபடுகையில் அவர்கள் இடையில் தழையாடை அணிந்திருப்பர்.
3
சூரியன் மறையும் நேரத்தில் கடலலை பொங்கி எழுவது போல ஊரார் உன் காதல் உறவு பற்றி அலர் தூற்றுகின்றனர்.
4
அலர் மொழி கேட்டுத் தாய் கண்ணுறக்கம் இல்லாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். 

இதனை எண்ணிக்கொண்டு, தோழி, நீ வருந்திக்கொண்டிருக்கிறாய்.
5
பொருளீட்டச் சென்ற அவர் சோழர் ஆளும் நெல் விளையும் நிலம் முழுவதும் கிடைப்பதாயினும் அங்குத் தங்கியிருக்க மாட்டார்.
6
வேனில் காலத்தில் பாலைநிலக் காட்டுவழியில் சென்ற அவர் தங்கியிருக்க மாட்டார்.

வானளாவிய குன்றம். குன்றத்தின் பிளவு வழிகள் (கவான்). ஆண்கரடி பெண்கரடியோடு கூடித் திளைக்கும் வழி.
பெரிய கையும் பிளந்த வாயும் உடையது கரடிகள் அவை.
இருள்நிற மயிரை உடைய கரடிக் குட்டிகள் தாய் முலையைச் சுவைக்கும் வழி.
அந்த வழியில் அவர் சென்றுள்ளார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
அம்ம, வாழி தோழி! ''பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
2
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,              5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
3
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்  10
4
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்'' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
5
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
6
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,        15
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கொற்கை | கற்பனை ஓவியம் 

No comments:

Post a Comment