Pages

Tuesday, 23 August 2016

அகநானூறு Agananuru 200

இணங்காத தலைவியை இணங்கவைக்கத் தோழி கையாளும் உத்தி.


1
தெருவில் நிலா வெளிச்சம் போல மணல் பரந்துகிடக்கும். 
அங்கே புலால் நாற்றம் அடிக்கும். 
அதில் புல்லால் வேய்ந்த குடிசை இருக்கும். 
அது ஊர் என்று சொல்லமுடியாத அளவுக்குச் சிறிதாக இருக்கும். 
தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். 
துன்பம் தரும் உறைவிடந்தான் அது. 

என்றாலும் ஒருநாள் வாழ்ந்து இன்பம் கண்டுவிட்டால் தன் ஊரையே மறக்கச்செய்யும் அளவுக்கு நல்ல பண்பினைக் கொண்ட ஊர் எங்கள் ஊர். 

சங்குப்பூச்சிகள் மேயும் நிலப்பரப்பின் தலைவனே! எம் ஊருக்கு ஒருநாள் வந்து செல்வாயாக!
2
பொங்கி வரும் அலை உடைந்து ஓடும் ஓங்கு மரச் சோலையில் பலவாறாகப் பாராட்டிக்கொண்டு பகலெல்லாம் எம்மோடு இருக்கலாம்
பொழுது விழும் நேரத்தில் உன் தேரைப் பூட்டிக்கொண்டு செல்லலாம்.
3
அப்படி இல்லாமல் என் தலைவியோடு கூடி இருந்துவிட்டுச் சென்றால், அந்தக் கூட்டத்தை என் மனத்தளவில் வைத்துக் கொள்வேன். 
உனக்கு ஒத்துவருமா? நீயே சொல். 
தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

இது இணங்காத தலைவியை இணங்கவைக்கக் கூறும் உத்தி. 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

1
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,  5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
2
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,    10
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
3
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.

தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது.
உலோச்சனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

புல் வேய் குரம்பை | குடிசை வீடு

No comments:

Post a Comment