Pages

Tuesday, 23 August 2016

அகநானூறு Agananuru 199

நன்னன் சேரநாட்டின் வடபகுதியைக் கைப்பற்றிக்கொண்டான். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறைப் போர்க்களத்தில் நன்னனைக் கொன்று தன் நாட்டை மீட்டுக்கொண்டான்.

1
கடலில் நீரலை மோதுவது போல, காற்றலை மோதும் காடு அது. அந்த மோதலை மராமலர் உதிர்கிறது என்று எண்ணி யானை ஏமாந்துபோகும் காடு அது. தண்ணீருக்காகத் தள்ளாடும் யானைகள் சுழன்று திரியும் காடு அது.
2
வற்றிக் கிடக்கும் கிளைகளில் சிலந்திக்கூடு இருக்கும் உலவை மர நிழலில், கானல்நீரை அருந்தி ஏமாந்திருக்கும் பெண்மானை, இரும்பை அறுக்கும் அரம் போன்ற பற்களை உடைய செந்நாய் துரத்தும். அந்தப் பெண்மான் காற்றில் பறக்கும் பூலாப்பூ போலப் பறந்தோடி ‘ஒய்’ என்று அலறும். அந்த ஓசையைக் கேட்ட ஆண்-கலைமான் தன் சுற்றத்தை அழைக்கக் குரல் கொடுக்கும். இப்படிக் கடல்போல் பரந்து கிடக்கும் காடு அது.
3
இப்படிப்பட்ட காட்டைக் கடந்து செல்வோம் ஆயின் செல்வது நல்ல பயன் தரும் என்னும் ஆசையோடு செல்ல நினைக்கின்றாய், நெஞ்சமே!
4
மூங்கில் போல் திரண்டு பருத்திருக்கும் தோளினை உடைய இவளை விட்டுவிட்டுச் செல்ல நினைக்கின்றாய், நெஞ்சமே!
5
அரசன் நன்னன், வாகைப்பெருந்துறை என்னுமிடத்திலுள்ள போர்க்களத்தில் சேர வேந்தன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அதனால் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நன்னன் கைப்பற்றிய நாட்டைத் திரும்பப் பெற்றான்.

அவன் திரும்பப் பெற்ற நாடுபோல் பெருஞ்செல்வம் கிடைக்குமாயினும், நெஞ்சே! இவளை விட்டுவிட்டு வரமாட்டேன். – தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
2
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்  5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய     10
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, ''பிறர் போல்
3
செல்வேம் ஆயின், எம் செலவு நன்று'' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,     15
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
4
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
5
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,     20
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
கல்லாடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

செந்நாய்கள் மானைத் துரத்தல்

No comments:

Post a Comment