ஆய் நாடு - கவிரம் பெயரிய கவாண் - சூர்மகள்
அவளது அரவணைப்பால் பெற்ற இன்பத்தை அவன் ஆருக்குச்
சொல்லமுடியும்? பிதற்றுகிறான்.
1
மற்றவர்களுக்குச் சொல்லுவேனா, சொல்லாமல் இருப்பேனா, ஒன்றும் புரியவில்லையே.என்னிடம் இருக்கும் காம உணர்வை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் ஆசையோடு சில சொற்களை நான் அவிழ்த்து விட்டேன்.அந்தச் சொற்களை நம்பி அவள் வந்தாள்.நள்ளிரவில் வந்தாள்.மழையை மறைத்து வைத்துக்கொண்டு காந்தள் மணம் (கார் மணம்) கூந்தலில் தன்னை மறைத்துக்கொண்டு வந்தாள்.தூய வேலைப்பாடுடன் கூடிய நூலாடை போர்த்தியிருக்கும் நெஞ்சோடு நெஞ்சைப் பொருத்தினாள்.
2
மலையில் தூறல் (இளமழை) விழும்போது அசையும் மயில் போல வந்தாள்.வண்டு மொய்க்கும் புத்தம்புது மலர்களைச் சூடிக்கொண்டு வந்தாள்.வில்லைப் போல் வளைந்து உள்ளீடு (குடைச்சூல் – சூல் கொண்ட குடை) கொண்டிருக்கும் சிலம்பு ஒலியை ஒடுக்கிக் கொண்டு வந்தாள்.ஊரே உறங்கும் யாமத்தில் வந்தாள்.வந்தவள் என்னை அணைத்துக்கொண்டாள்.இப்போது விலகிச் செல்கிறாள்.
3
அவள் கற்பின் அடக்கம்.பெருமையின் பெருக்கம்.மாமை நிறம் கொண்ட வெறும் அரிவைப் பருவ அழகி அல்லள்.
4
தென்திசையில் ஆளும் அரசன் ஆய்.அவன் நாட்டில் அணங்கு வாழும் காடு.அதில் கவிரம் என்னும் பெயர் கொண்ட மலைப்பிளவு (கவான் – கணவாய்)அங்கே மலர்கள் பூத்துக் குலுங்கும் சுனை.அந்தச் சுனையில் வாழும் சூர்மகளோ என்று எண்ணி என் நெஞ்சு திண்டாடுகிறது.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
''கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?'' எனக்
கரந்த காமம் கைந் நிறுக்கல்லாது,
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை 5
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
2
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
வில் வகுப்பு உற்ற நல் வாங்கு குடைச் சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, 10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
3
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
4
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், 15
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சே!
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment