Pages

Monday 22 August 2016

அகநானூறு Agananuru 195

காதலனுடன் சென்ற என்மகளைக் கூட்டிக்கொண்டு 
அவன் தன் மனைக்குச் செல்வானா, 
இல்லை என் மனைக்கு வருவானா, 
வேலா, 

உன் கழங்கை உருட்டிக் குறி சொல். 

பெண்ணைப் பெற்ற தாய் கேட்கிறாள்.
1
அவன் வேல் தாங்கிய காளை. 
என் மகள் பெரிய தோளை உடையவள் என்றாலும் சிறுமி. 
இருவரும் ஓடிப்போனார்கள். 

காளை சிறுமியை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவான் என்று அவனது தாய் வீட்டுக்கு வெள்ளை அடித்து, பூ மாலை தொங்கவிடுகிறாள் என்கின்றனர்.
2
நானோ மானைப்போல் மருளும் நல்லவளைப் பெற்ற உறவுக்காக அழைத்துக்கொண்டு வராவிட்டாலும், புன்முறுவல் பூக்கும் அவளைப் பலநாள் கூந்தல் வாரி, இடுப்பில் துணி கட்டிவிட்டு, அழகுபடுத்தி உதவியிருக்கிறேனே, அதைப்பற்றியாவது அவன் எண்ணிப் பார்த்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
3
குறி சொல்லும் வேலனே! 
துணித் தலைப்பாகை கட்டிக்கொண்டிருக்கும் வேலனே! 
பல தலைகளை உடைய குறி பார்க்கும் கோலைப் பையில் வைத்திருக்கும் வேலனே! 
உன் கோலை நிறுத்திப் பார்த்து எனக்குச் சொல்.
4
கழங்கை உருட்டிப் பார்த்துச் சொல். 
மாறாத கண்ணீருடன் இரவெல்லாம் அழுதுகொண்டிருக்கும் என் துயரம் தீர்ந்து உறக்கம் கொள்ளுமாறு, என் மனைக்கு முதலில் கூட்டிக்கொண்டு வருவானா? 
அவன் என்ன நினைக்கிறான் என்று குறி பார்த்துச் சொல். 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்'' என, தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், 5
2
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன் மன்னே;   10
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
3
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
4
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;   15
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?

மகட் போக்கிய நற்றாய் சொல்லியது.
கயமனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பூவல் ஊட்டல் | வெள்ளை அடித்தல் 

வேலம்மா குறி சொல்கிறாள் (இக்காலம்)
இது போல் வேலன் குறி சொல்லுவான் 

No comments:

Post a Comment