என் மகள் காதலனுடன் சென்றுவிட்டாள்.
எனக்கோ
துன்பம்.
ஊர்த் திருவிழாவுக்கோ ஒரு இழப்பு.
செவிலி இவ்வாறு கூறுகிறாள்
1
பலா பழுக்கும் காடு வெம்பிக் கிடக்கும். வானம் கண்ணால் பார்க்கமுடியாதபடி கோடைவெயில் காய்ச்சும். குளத்தில் நீர் இருக்காது. எங்கும் கல்தான் ஓங்கி உயர்ந்து காணப்படும் நிலம் அது.
2
கருவுற்றிருக்கும் (நாறு உயிர், உயிர் முளைத்திருக்கும்) பெண்யானையை ஆண்யானை தழுவி (தழைஇ) அழைத்துக்கொண்டு வேற்றுநாட்டுக்குச் செல்லும்.
திருவிழாவுக்குச் செல்லும் மள்ளர் (மேளக்காரர்) முழவைத் தூக்கிக்கொண்டு செல்வது போலச் செல்லும்.
இந்த வழியில் இவற்றையெல்லாம் வேடிக்கைக் காட்டிக்கொண்டு அவன் என் மகளை அந்த மலைப் பிளவில் (கவான்) அழைத்துச் செல்வான்.
3
என் மகள் பசுமை நிறைந்த வயலை-மாலையை இடுப்பில் அணிந்திருப்பாள். அவள் சென்று பிறருக்கு உரியவள் ஆகிவிட்டாள்.
4
இந்த நேரத்தில், திசையெல்லாம் அவளைத் தேடிப் பார்த்துக்கொண்டு, துன்பத்தோடு (எவ்வம்) அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் (படர் = நினை, படர் மெலிந்து இரங்கல் - திருக்குறள்).
என் வீடெல்லாம் அவள் இல்லாமல் இருண்டு கிடக்கிறது.
ஊரிலே நல்லவர்கள் (நன்னராளர்) கொட்டு மேளத்துடன் தேர் வரும் தெருவில் அவள் இல்லாமல் விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஊர் இழந்த பொருள்களில் ஒன்றாக அவள் ஆகிவிட்டாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
2
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, 5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
3
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் 10
4
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. 15
மகட் போக்கிய செவிலி சொல்லியது.
கயமனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment