Pages

Saturday, 20 August 2016

அகநானூறு Agananuru 185

தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.

1
ஆயிழை! தோழி! ஒளிரும் என் வளையல் கழல்கிறது. பருத்த என் தோள் அழகிழந்துவிட்டது. நெஞ்சு பற்றுக்கோடு இல்லாமல் தவிக்கிறது. இப்படி இருக்கச் செய்துவிட்டு இரும்பு-உயிர் கொண்டவர் போல நம்மை விட்டுவிட்டுப் போய்விட்டார். வற்புறுத்தி வாழும்படி வைத்துவிட்டுப் போய்விட்டார், என் காதலர்.
2
வாடிக் கிடக்கும் மூங்கிலில் இருந்து நெல் கொட்டும். களிப்புற்ற மள்ளர் வில்லிலிருந்து அம்பு கொட்டுவது போலக் கொட்டும். பசுமை அற்றுப்போன கல்மலைப் பரப்பு அது. வேனில் காலம்.
3
வானம் வறண்டு போய்விட்டது. ஏதோ ஒரு அருவியில் நீர் கொட்டுகிறது. அதன் அருகில் இலவமரம். இலையே இல்லாத அந்த மரம் பூத்திருக்கும். கார்த்திகை விழாவில் விளக்கு வைத்திருப்பது போலப் பூத்திருக்கும். அப்படிப் பூத்திருக்கும் வழியைக் கடந்து அவர் சென்றுவிட்டார். தனியே இருந்துகொண்டு நான் என்ன செய்வேன். இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்; வாடல் 5
2
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
3
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,   10
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


இலவம் பூ | கார்த்திகை விளக்கு போல்
கார்த்திகை விளக்கு | இலவம் பூ பூத்திருப்பது போல்

No comments:

Post a Comment