Pages

Friday 12 August 2016

அகநானூறு Agananuru 165

காதலனுடன் ஓடிப்போன மகளை நினைத்து, செவிலி கலங்குகிறாள்.


1
பெரிய தலையை உடைய பெண்யானை குழியில் விழுந்துவிட்டது. ஆண்யானை அதனை வெளிக்கொணரப் பிளிறிற்று. அதனைக் கேட்ட யானைக்கன்று வெருண்டு ஊருக்குள் சாணம் தெளித்திருந்த தெருவில் ஓடிற்று. அங்குப் பட்டியில் இருந்த ஒரு பசுவின் முலையில், இளமையால் சிவந்திருந்த தன் வாயை வைத்துப் பால் பருகிற்று. இப்படிப்பட்ட பல நாடுகளைத் தாண்டி நன்னராட்டி (நல்லவளாகிய தலைவி) சென்றுவிட்டாள்.
2
அதனால் பொலிவிழந்த அவளது தோழிமார் அழுதனர். ஓடிப்போனவள் தாழியில் வளர்த்த பூ வாடிப்போயிருந்தது. அவள் விளையாடிய பாவைப்பொம்மை ஒன்று வீட்டு நொச்சி மணல் நிழலில் கிடந்தது. இவற்றைக் கண்ட செவிலி வாடிய பூவைப் பறித்து, பாவைப் பொம்மைக்குச் சூட்டி, அதன் கண்ணையும், நெற்றியையும் நீவி, “என்னை அணைத்துக்கொள்; என் உயிர் போகிறது” என்று சொல்லிப், பொம்மையை அணைத்துக்கொண்டு அழுதாள்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்           5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
2
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
''இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!'' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,           10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
''தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!

மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. காலத்துப் பாடல்

இது தொட்டியில் மல்லிகை
அக்காலச் சிறுமியர் பானைத் தாழியில் பூச்செடி வளர்த்தனர் 

No comments:

Post a Comment