Pages

Friday, 12 August 2016

அகநானூறு Agananuru 163

அயிர் அடு குப்பை
மணலை வீணாக்கும் குப்பை போல் என் மனம் ஆயிற்று


அவள்மீது வீசும் வாடைக் காற்றுக்கு அவள் அறிவுரை கூறுகிறாள்.

1
வானமே அதரும்படியும், மலர்கள் கொட்டும்படியும் குளுமையான மழை பொழிந்தது. அப்படிப் பொழிந்த பருவம் மாறும் கடைசி நாள்.
2
நான் தனியே இருக்கிறேன். பிரிந்து சென்ற அவரை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறேன். என் வளையல்கள் என் தோளில் நிற்காமல் நழுவுகின்றன, அவர் வரவேண்டும் என்று அளவில்லா ஆசையோடு, அவர் வரும் திசையை நோக்கி நின்றுகொண்டிருக்கிறேன். வாடைக்காற்றே! இவள் இரக்கம் கொள்ளத்தக்கவள் என்று நீ எண்ணிப் பார்க்கவில்லை.
3
யானை பெருமூச்சு விடும்போது வெளிவரும் நீர்த்திவளை போலப் பனித்துளிகளை வீசுகிறாய். அதனால் என் கண்ணே நடுங்குகிறது. தாமரைப் பூ கரிந்து போகிறது, இது முன்பனிக் காலம். நள்ளிரவு நேரம்.
4
குன்றமே நடுங்குவது போன்ற குளிரைத் தரும் வாடையே! நீ எனக்காகவே வீசிகிறாய் போலத் தெரிகிறது.
5
ஆற்றில் நீர் ஓடும்போது அதில் உள்ள மணல் உருண்டு ஓடுவது போல என் நெஞ்சு நெகிழ்ந்து ஓடுகிறது. இப்படி ஓடும்படிச் செய்துவிட்டு என் கொடியவர் சென்றிருக்கும் தேசத்தில் இடைவிடாமல் வீச அங்குச் செல்வாயாக. அங்குச் சென்று வீசினால், பொருளீட்டும் வினையில் முனைப்புடன் இருக்கும் அவர் உன்னால் என்னைப் பற்றி நினைக்கவும் கூடும்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
2
எமியம் ஆக, துனி உளம் கூர,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி    5
விளியும் எவ்வமொடு, ''அளியள்'' என்னாது
3
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
4
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி! புனற் கால்   10
5
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
கழார்க்கீரன் எயிற்றியார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


பனிக்காற்று | வாடை

No comments:

Post a Comment