சூரர மகள் கிடைக்கமாட்டாள்.
அவளைப் போன்றவள்
வந்து என்னைத் தழுவினாள்.
இன்னும் என்ன வேண்டும்?
தலைவன் நினைக்கிறான்.
1
கொள்ளக் குறையாத கடல். சங்குப் பூச்சிகள் வளரும் கடல். அளக்க முடியாத கடல். நீரைக் கொண்டு செல்லும் மேகங்கள். விரிந்த வானத்தில் நெருப்புக்கொடி பறப்பது போல் மின்னல். உருமும் இடி. ஓசையுடன் மழை. இடைவிடாமல் வானம் உமிழும் மழை. இப்படி மழை பொழியும் நள்ளிரவு.
2
தலைவன் சொல்கிறான். காவலர் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து என்னவளது தந்தை அரண்மனையின் ஒரு பக்கம் நின்றிருந்தேன். பனிக் காற்று துன்புறுத்திக்கொண்டிருந்தது.
3
ஆற்றுமணல் படிவு போல் நெளிந்து பரந்திருக்கும் கூந்தல். மழையில் நனைந்து முக ஒளியில் பூத்திருக்கும் மலர் போன்ற கண்கள். பூ மொட்டுகளின் வரிசை போன்ற பற்கள். திருமகள் விரும்பும் பற்கள். அந்தப் பற்கள் சிரிக்கும் பவளம் போன்ற வாய். இவற்றைக் கொண்ட அவள் வளையல் குலுங்க அசைந்து வந்தாள். காற்றில் அசைந்தாடும் தளிர் போல் வந்தாள். வந்தவள் என் காம நோய் அசதி காணாமல் போகும்படி என்னைத் தழுவினாள்.
4
அரசன் அதிகன் (அதியமான்) சொன்ன சொல் தவறாதவன். இரவலர் எண்ணிவந்த பொருள்களை எல்லாம் வழங்குபவன். காலில் வீரக்கழல் அணிந்தவன். அவன் நாட்டில் மலை. வேங்கைமரம் மிகுந்த மலை. கொள்ளக் குறையாத பலாப்பழம் மிக்க மலை. பசும்பூண் பாண்டியன் அவனது அந்த மலையில் தன் படையை நடத்தினான். பாண்டியன் யானைகளின் மேல் வெள்ளைக் கொடி பறந்தது. அது பாண்டியன் அதியனிடம் கொண்ட நட்பின் அடையாளக் கொடி. அந்தப் பறக்கும் கொடிகளைப் போல,
5
அவன் மலையிலிருந்து அருவி கொட்டிற்று. அந்த அருவியிலும், அவன் மலையிலும் நடமாடும் சூரர மகளிர் போல இவள் எனக்குக் கிடைத்தற்கு அரியவள். கிடைத்தற்கு அரியவள் வந்தாள், தழுவினாள். இன்னும் எனக்கு என்ன வேண்டும்?
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி, 5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
2
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
3
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என 10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, 15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
4
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
5
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
சூரர மகளிரின் பெறற்கு அரியோளே. 25
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment