Pages

Thursday 11 August 2016

அகநானூறு Agananuru 159

ஆமூரில் வாழும் வாழ்க்கை அக்காலத்தில் பாதுகாப்பான பேரின்ப வாழ்க்கையாக இருந்தது.

1
தெண்கழி என்னும் உப்புவயலில் விளைந்த வெள்ளைக் கல்லுப்பை விலை கூறிக்கொண்டு, கழுத்தில் வலிமை கொண்ட எழுதுகளை நுகத்தில் பூட்டிய வண்டிகளை வரிசையாகத் தொடுத்து, உமணர்கள் ஓட்டிச் செல்வர். வழியில் சமைத்து உண்பர். பின் சமைத்த அடுப்புகளை அப்படியே விட்டுச் செல்வர்.
2
வடித்த கூர்மையான அம்பும், கொடுமை செய்யும் வில்லும் கொண்ட ஆடவர் தம் வில்லை வளைத்துக்கொண்டு, பசுக் கூட்டத்தைக் கவர்ந்து செல்வர். எதிர்தவர்களோடு போராடி வெற்றி கண்டவர் தம் துடியை (உடுக்கை) அடிப்பர். துடியில் பண் முழக்குவோர் உவலைப் பூ மாலை அணிந்திருப்பர். இவர்கள், உமணர் விட்டுச் சென்ற அடுப்பில், தாம் வேட்டையாடியவற்றை வாட்டித் தின்பர். பல வழிகள் பிரியும் கவலைப் பாதையில் இது நிகழும். இந்தக் கவலை வழியில் காதலர் சென்றுள்ளார் என்று அவலம் கொள்ளாதே, தோழி, என் அன்புக்கு உரிய தோழி, அவலம் கொள்ளாதே. தோழி தலைவியை இப்படித் தேற்றுகிறாள்.
3
ஆமூர் அக் காலத்தில் சிறந்து விளங்கிய ஊர். அது இடி முழங்கும் குறும்பாறை மலைக்குக் கிழக்கில் இருந்தது. (இது இப்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆமூர்) இதனை வானவன் என்னும் சேர மன்னன் தாக்கினான். ஆமூர் அரசன் கொடுமுடி என்பவன் வானவனின் யானையை வீழ்த்தி ஆமூரைக் காப்பாற்றினான். அந்த ஆமூர் நீண்ட மதில் சுவரைக் கொண்டது. மறைந்திருந்து தாக்கும் குரூஉக்கண் புழைகளைக் கொண்டது. அந்த ஆமூர் வாழ்க்கையே காதலர்க்குக் கிடைப்பதாயினும்
4
அந்த ஆமூரிலேயே தங்கி இருக்கமாட்டார் உன் காதலர். பூண் அணிந்த உன் மார்பில் பொருந்திக் கிடப்பதை மறந்து ஆமூரில் தங்கியிருக்க மாட்டார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
2
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்   5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்  10
கவலை, ''காதலர் இறந்தனர்'' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
3
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்  15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
4
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர், நின்    20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
ஆமூர்க் கவுதமன் சாதேவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பூண் தாங்கு ஆகம்
அணிகலன் தாங்கிய மார்பகம்

No comments:

Post a Comment