அறத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை
1
அறம் செய்வதே வாழ்க்கை. அதில் கடைப்பட்ட நிலை கூடாது. வாழ்க்கைக்காகப் பிறர் வாசற்படிக்குச் செல்லக்கூடாது. செல்வம் இந்த இரண்டு நெறிநிலைகளையும் செய்யும் என்று என் கூந்தலை நீவிக்கொண்டே சொல்லியவர் பொருளீட்டச் சென்றுள்ளார். அணிகல ஒப்பனை பூண்டவளே! கேள்.
2
நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. அவர் தம் செயலைச் செய்து முடிக்க வேண்டும். தோழி! இதைத்தான் நான் விரும்புகிறேன்.
3
கோவலர் பாழ்நிலத்தில் கூவல் குழி தோண்டி, ஆனிரைகளை நீண்ட விளி செய்து அழைத்து, நீருண்ணச் செய்வர். நீருக்காக நா காய்ந்து வருத்தமுடன் வரும் யானை அந்த வளைந்த வாயை உடைய பத்தல்-குழியில் நீர் அருந்ததிய காலடிச் சுவடு இருக்கும். அந்த ஈரச் சுவட்டில் புலியின் காலடிச் சுவடும் பதிந்திருக்கும்.
4
யாழிசை கூட்டும் வயிரியர் குற்றமற்ற நாவால் பாடுவர். அவர் பாடலுக்கு ஏற்பக் கையால் கொட்டும் முரசு முழக்கப்படும். கைவிரல் பதிவு அந்த முரசில் பதிந்திருக்கும். அந்தப் பதிவு போல யானைக் காலடியில் புலிக் காலடி பதிந்திருக்கும். அந்தக் காலடிப் பதிவுள்ள மலை வழியில் அவர் சென்றுள்ளார்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!'' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
2
நோய் நாம் உழக்குவம் ஆயினும், தாம் தம் 5
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
3
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
4
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment