கபிலர் நாட்டு வரலாறு காட்டும் புலவர்
இன்பம் தந்துவிட்டுத் திரும்பிப் போகிறாளே
அவளது கூந்தல் அழகும், தோள் மணமும் மீண்டும் கிடைக்குமா என்று என்னைத் துன்பத்தில்
ஆழ்த்துகின்றன என்று தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான்.
1
அவள் வந்தாள். இன்பம் தந்தாள். காமத்தால் நெஞ்சு நடுங்கும் என் துன்பம் தீர வந்தாள். இப்போது குன்றின் அருகில் இருக்கும் அவளது சிற்றூர்க்குச் செல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறாள். வளம் காட்டிச் சுருண்டிருக்கும் அவளது ஐம்பால் கூந்தல் மட்டும் தெரிகிறது.
2
தித்தன் வெளியன் அரசன். கையில் கோலை வைத்துக்கொண்டு குறி சொல்லிப் பாடும் அகவுநர் மக்களைப் பேணிப் பெரும்புகழ் கொண்டவன். சினம் கொண்ட பெரும்படை உடையவன். ஒலிக்கும் கடல் சார்ந்த ‘கானலம்பெருந்துறை’ என்னும் நிலப்பரப்பின் அரசன்.
3
இந்தக் கானலம்பெருந்துறை இறால் மீன் செல்வ வளம் கொண்டது. ஈட்டிய செல்வத்தை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல்களையே தாக்கிச் சிதைக்கும்.
4
அரசன் பிண்டன் தன் மொய்ம்பு வலிமையால் இந்த இறால் மீன்களைப் போலத் தாக்கிக்கொண்டிருந்தான். அவனது போர்முனையை வேல்படை கொண்டு நன்னன் உடைத்தெறிந்தான்.
5
நன்னன் ஆரநன்னன் எனப் போற்றப்பட்டவன். (ஆரம் என்பது சந்தனம். சந்தனமரத்தைக் காவல் மரமாக் கொண்டிருந்ததால் இவன் இப்படி வழங்கப்பட்டிருக்கலாம்) களிறுகளைக் கொடையாக வழங்கி இந்த நன்னன் புகழ் பெற்றவன். ’ஏழில்’ என்னும் பெயர்கொண்ட உயர்ந்த மலை இவன் நாட்டில் இருந்தது. களித்தாடும் மயில்கள் இந்த ஏழில் மலையில் அதிகம் (இப்படி மயில் ஆடும் எழில் கொண்ட மலை ‘ஏழில்’மலை எனப் பெயர் பெற்றிருக்கலாம்) நான் பார்த்துக்கொண்டிருக்கிறேனே அவளது கூந்தலை அந்தக் கூந்தல் இந்த ஏழில்மலை மயிலின் தோகை போல் அழகானது.
அவள் தோள் எப்படிப்பட்டது தெரியுமா? கேள்.
6
வள்ளல் அரசன் நள்ளி வில்லாண்மை கொண்ட படைவீரர்களின் (இளையர்) தலைவன் (பெருமகன்). அவனது சோலை அடுக்கத்தில் காந்தள் மலர்கள் சுரும்பு வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்திருக்கும். அவை முருக்கடவுளுக்கு உரிய மலர்கள். அந்தக் காந்தள் மலரின் மணம் அவள் தோளில் கமழும்.
7
வல்லவரோ, வல்லவர் அல்லாதவரோ யாராயினும் நாடி வந்தவர்க்கெல்லாம் அவர்கள் வைத்திருக்கும் கொள்கலன் நிறையும்படியாக ஆய் அரசன் வாரி வழங்குவான். ஆய்அரசன் காடு பெரிய பெரிய யானைகளைக் கொண்டது. அது மலைக்காட்டில் (பொதியமலைக் காடு). தலையாறு என்னும் ஆறு பாயும் அதன் பள்ளத்தாக்கில் வளர்ந்திருக்கும் மூங்கிலில் இரண்டு கணுக்களுக்கு இடையில் திரண்டிருக்கும் பகுதி போன்றது அவள் தோள்.
அவள் கூந்தலும், தோளும் இப்போது சேய்மையில் (தொலைவில்) தெரிகின்றன. அவை மீண்டும் கிடைக்குமா என்று என்னை நடுங்க வைத்துத் துன்பம் தருகின்றன.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
2
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், 5
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
3
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
4
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், 10
5
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
6
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி 15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
7
வல்லினும், வல்லார் ஆயினும், சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், 20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment