Pages

Sunday, 7 August 2016

அகநானூறு Agananuru 151

அருள்தானா அவருக்குப் பொருள்


தோழி! அவர் பிறருக்கு அருளவேண்டிய நெஞ்சத்தில் பிறிது ஆயினார். தலைவி சொல்கிறாள்.
1
அவரை விரும்புவோரை அவர் தாங்க வேண்டும். அவர் விரும்பும் இனிய உறவினர்களுடன் பாதுகாப்பாகத் தழுவிக்கொண்டு வாழ வேண்டும். இவ்வாறு சிரித்து மகிழ்ந்து வாழாதவர்கள் வறுமையுற்றவர் ஆவார்கள். இதனை எண்ணிக்கொண்டு வறுமை இல்லாமல் வளமுடன் வாழ விரும்பிப் பொருள் ஈட்டிவர அவர் என்னைப் பிரிந்து சென்றுள்ளார். தோழி! அவர் நெஞ்சுக்கு அருள் என்பது பொருள் என்று ஆகிவிட்டது.
2
புள்ளிக் கலைமானின் தலையைப் போல் முதலில் முதல் என்று கிளையில் கிளையாகப் பிரிந்து செல்லும் உழிஞ்சில் மரத்தில் விளைந்திருக்கும் நெற்றுகள் பெருங்காற்று வீசும்போதெல்லாம் கழைக்கூத்து ஆடும் மகளின் ஆட்டத்துக்காக எழுப்பப்படும் பறையொலி போல மெல்ல ஓலிக்கும் காட்டுக்குச் சென்றுள்ளார். செதுக்கியது போன்று காணப்படும் அந்த மரத்தின் நிழல்தான் அவர் தங்கும் பதுக்கை இடம்.
3
அங்கே கள்ளிமுள் நிழலில் இருந்துகொண்டு, அந்த வழியில் செல்பவர்களுக்கு நிகழப்போவதை மணி அடிப்பது போன்ற ஒலி எழுப்பிக் கணியமாகக் கூறும் பல்லிகள் வாழும் காட்டு வழியில் சென்றுள்ளார். அவருக்குப் பொருள்தானா அருள்?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
''தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!'' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு 5
2
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்    10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
3
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!  15

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.
காவன்முல்லைப் பூதரத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


கழைக்கூத்துக்குப் பறை

No comments:

Post a Comment