Pages

Sunday, 7 August 2016

அகநானூறு Agananuru 150

அவர் வரமாட்டாரோ, அவள் ஏக்கம்.

1
பின்னல் சடை போட்ட நெருக்கமான கூந்தல், மார்பகத்தில் பொன் போல் பூத்திருக்கும் சுணங்கு, கச்சம் பிதுங்கும்படி முண்டும் முலை இவற்றையெல்லாம் பார்த்து, நீ பெரிதும் எல்லினை (பெரியவளாகிப் பூப்பு எய்தியுள்ளாய்) என்று கூறிக்கொண்டு தாய் இவளைத் திரும்பத் திரும்ப அரவணைத்து, வீட்டை விட்டு விலகிச் செல்லாமல் கட்டுக்காவலில் வைத்துவிட்டாள்.
2
மாலை அணிந்த மார்பனே! இவள் விரைந்து பாயும் வாள் போன்ற சுறா மீன் மேயும் துறைக்கு வரும்போதெல்லாம், இவளது கண்களைப் போல் மலர்ந்திருக்கும் நெய்தல் பூவையும், நனைந்து மொட்டு விரியும் செருந்திப் பூவையும், மாலையில் கூம்பிக் காலையில் மலரும் காவிப் பூவையும், அவை பூத்துக் கிடக்கும் உப்பங்கழிகளையும், அங்கே மரங்களுடன் கானப்படும் கானலையும் பார்க்கும்போதெல்லாம் “அவர் (நீ) வரமாட்டாரோ” என்று சொல்லிக்கொண்டு வருந்துகிறாள். நான் என்ன செய்யட்டும், என்கிறாள் தோழி, தலைவனிடம்.   

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்

1
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
''எல்லினை பெரிது'' எனப் பல் மாண் கூறி,
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,     5
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
2
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்    10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
''வாரார்கொல்?'' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.
குறுவழுதியார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கண் உருத்து எழுதரு முலை

No comments:

Post a Comment