Pages

Sunday, 24 July 2016

நற்றிணை Natrinai 200

கட்டிய பூமாலை போல நொச்சிப் பூத்திருக்கும். அந்த நொச்சிப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு ஆறு போல் பரந்து கிடக்கும் தெருவில் சென்று “ஊரில் திருவிழா” (சாறு) என்று சொல்லிக்கொண்டே செல்லும் குயவனே, பழமை சொல்லும் குயவனே! 
நான் கூறும் இதனையும் சேர்த்துச் சொல்லிக்கொண்டே செல்வாயாக. 
பழமையான வயல்ககளிலும், பொய்கையிலும் ஆம்பல் பூத்துக் கிடக்கும் அந்த ஊருக்குச் செல். அந்த ஊரில் கை விரல்களால் தடவிப் பண் (பனுவல்) பாடும் பாணன் செய்யும் துன்பம் பல்கிக்கொண்டே போகிறது. பல்லை இளித்துக்கொண்டு, மென்மையான அல்குலைக் காட்டிக்கொண்டு வாழும் மகளிரைப் பற்றிப் பொய்யே பேசுகிறான். ’என் கணவன் அவர்களைப் பார்த்ததே இல்லை’ என்று கொடுமையாகப் பேசுகிறான். அப்படி அவன் பேசாமல் இருக்கும்படிச் சொல். 
தலைவி, குயவனிடம் இப்படிச் சொல்கிறாள்.  
 
குயவன்

குயவன் 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – மருதம்

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முது வாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகி
கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து வாயிலாகப் புக்க பாணன் கேட்ப குயவனைக் கூவி இங்ஙனம் சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது
கூடலூர்ப் பல் கண்ணனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment