Pages

Sunday, 24 July 2016

நற்றிணை Natrinai 197

“என் தோளிலிருந்து வளையல்கள் நழுவுகின்றன. என் நெற்றியில் பீர்க்கம்பூப் போல் மஞ்சள் நிறத்தில் பசப்பு ஊர்கின்றது. என் கண்கள் பனியைக் கொட்டுகின்றன. இனி தெரிந்துவிட்டது. என் உயிர் தேய்கிறது”. தோழி இவ்வாறு சொல்லிக்கொண்டு அழாதே. (தோழி தலைவியிடம் செல்கிறாள்) நீண்டு தழைத்துத் தொங்கும் உன் கூந்தலில் வண்டு மொய்க்கும் புதுமலர் சூடப்போகிறாய். அகவையில் மூத்த பெண்கள் (பெருமுதுமகளிர்) உன் முன்கையில் சிறு வளையல்களையும் தோளில் பொன் வளையல்களையும் சூட்டப்போகிறார்கள். அவை மின்னப்போவது போல் அவர் மலைநாட்டில் மழை தரும் மின்னல் தோன்றுகிறது. உனக்கு நடக்கப்போகும் திருமணத்தில் முழங்கவிருக்கும் முரசு போல் அவர் மலைநாட்டில் மழை தரும் இடி முழக்கம் கேட்கிறது. தோழி! அழாதே.  
 
இது பீர்க்கம் பூ.
காதல் நினைவில் வாடும்
மகளின் நெற்றியில்
ஊரும் பசலை
இந்தப் பீர்க்கம் பூ
நிறத்தில் இருக்குமாம்.  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
நக்கீரர் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment